இலங்கையில் நிலவும் சீரற்ற அரசியல் சூழ்நிலை, நாட்டின் பொருளாதாரக் கண்ணோட்டத்தில் குறிப்பிடத்தக்க நிச்சயமற்ற தன்மையை உருவாக்குகிறது என்று உலக வங்கி தெரிவித்துள்ளது..
கடன் நிலைத்தன்மையை மீட்டெடுக்க வெளி மற்றும் சில உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தேவைப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இலங்கையின் பொருளாதாரம் 2023 மற்றும் அதற்குப் பின்னரும் குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொள்ளும் என உலக வங்கி தனது சமீபத்திய அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
2023 ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதாரம் 4.3 சதவீதமாக சுருங்கும் என்று அறிக்கை ஊடாக கணிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச பங்காளிகளின் நிதியுதவியுடன் அரசாங்கத்தின் சீர்திருத்தத் திட்டத்தை வலுவாகவும் திறமையாகவும் செயல்படுத்துவதன் மூலம் பொருளாதாரத்தை சிறந்த முறையில் பராமரிக்க முடியும் என்று உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.
உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், 2021 மற்றும் 2022ல் 27 இலட்சத்துக்கும் அதிகமானோர் வேலை இழந்துள்ளதாகவும், 27 லட்சம் பேர் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏழைக் குடும்பங்கள் மற்றும் நலிவடைந்த குடும்பங்களைப் பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.