தொல்பொருள் தொடர்பான நடவடிக்கைகளின் போது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காலங்காலமாக வாழ்ந்து வருபவர்களின் வீடுகள் மற்றும் அவர்களது விவசாய நிலங்கள் அபகரிக்கப்படும் நிலை உருவாகியுள்ளதாகவும் அது தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்பி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
திருகோணமலை அரிசிமலை, பொன்மலை குடா பிரதேசத்துக்கு சென்ற மதத் தலைவர்களுக்கு அமைச்சு பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகளின் பாதுகாப்பு எந்த அடிப்படையில் வழங்கப்பட்டது என்றும் அவர் சபையில் கேள்வியெழுப்பினார்.
பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் எதிர்க்கட்சி எம்பி இம்ரான் மஹ்ரூப் கேள்வியொன்றை முன்வைத்த சந்தர்ப்பத்திலேயே அவரது கூற்றுக்கு ஆதரவாக ரவூப் ஹக்கீம் எம்பி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இம்ரான் மஹ்ரூப் எம்பி தமது கேள்வியின் போது:
திருகோணமலை அரிசிமலை பொன்மலை குடா பிரதேசத்தில் சில தினங்களுக்கு முன்னர் பெளத்த பிக்கு ஒருவர் பெளத்த சிலையொன்றை வைக்க முற்பட்டார்.இதன்போது ஏற்பட்ட சம்பவம் தற்போது சமூக வலைத்தலங்களில் வைரலாகி வருகிறது. இந்த மதகுருவுக்கு அமைச்சுப் பாதுகாப்பு அதிகாரிகளின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இவர்கள், அங்கு எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கு துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தயும் உள்ளனர். மக்களின் எதிர்ப்பினாலே சிலை வைக்கும் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது.
அத்துடன் தொல்பொருள் நடவடிக்கையின் போது எமது பிரதேசத்தில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவந்த மக்களின் வீடுகள், அவர்களின் விவசாய காணிகளும் அபகரிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது. அதுதொடர்பாக அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கை என்ன? என அவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் விதுர விக்கிரம நாயக்க, மேற்படி சம்பவம் தொடர்பாக எந்த தகவலும் கிடைக்கவில்லை. அதுதொடர்பில் ஆராய்ந்து உங்களுக்கு அறிக்கை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பேன் என்றார்.
அத்துடன் தொல்பொருள் நடவடிக்கையின் போது ஏதாவது முறைகேடு இடம்பெற்றிருந்தால் அதுதொடர்பில் தகவல் வழங்கினால் நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதன்போது ரவூப் ஹக்கீம் குறுக்கிட்டு, திருகோணமலை அரிசிமலை பொன்மலை குடா பிரதேசத்துக்கு சில மதத்தலைவர்கள் அமைச்சு பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளுடன் சென்றுள்ளனர். எதிர்ப்பு தெரிவித்த மக்களை நோக்கி துப்பாக்கிகளை நீட்டி அச்சுறுத்தியுள்ளனர்.
அமைச்சு பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் எந்த அடிப்படையில் மதத்தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியும்?எனவும் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர் அமைச்சு பாதுகாப்பு பிரிவு, பெளத்த கலாசார அமைச்சுக்கு உட்பட்டதல்ல. அந்த கேள்வியை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரிடமே கேட்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.