13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி சகல கட்சிகளினதும் ஒத்துழைப்பைப் பெற்று அனைத்து இன, மத,மொழி மக்களிடையேயும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதே அரசின் நோக்கம் என்கிறார் அமைச்சர் அலி சப்ரி
தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் வகையில் அமைச்சரவை உப குழுவொன்றை ஸ்தாபிக்கவுள்ளதாகவும் மூன்று கட்டங்களாக அதனை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி, பாராளுமன்றத்தின் அனைத்து கட்சிகளினதும் ஒத்துழைப்பை பெற்றுக்கொண்டு அனைத்து இலங்கையருக்கும் கிடைக்க வேண்டிய கௌரவத்தை உரிய வகையில் பெற்றுக் கொடுப்பது தொடர்பில் விரிவான இணக்கப்பாட்டை கொண்டு வருவதே அந்த அமைச்சரவை உப குழுவின் முதற்கட்ட நடவடிக்கையாகும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, சர்வதேச தரத்துக்கமைய பயங்கரவாத தடைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு முன்பதாக அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு கருத்துக்களைப் பெற்றுக் கொள்வது அந்த அமைச்சரவை உப குழுவின் இரண்டாவது கட்ட நடவடிக்கையாகும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். பொறுப்புக் கூறும் நடவடிக்கையின் ஒரு அம்சமாக உண்மையைக் கண்டறியும் பொறிமுறையொன்றை உருவாக்குவது அந்த அமைச்சரவை உப குழுவின் மூன்றாவது கட்ட நடவடிக்கையாகும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிரதான நோக்கமாகும்.
அதற்கிணங்க பிரச்சினைகளுக்கு நீண்ட கால தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்காக ஸ்திர நிலை மற்றும் பொருளாதார மறுசீரமைப்பை சாத்தியப்படுத்திக் கொள்வதும் அவரது நோக்கமாகுமென்றும் அமைச்சர் அலி சப்ரி மேலும் தெரிவித்துள்ளார்.