உலகில் இரண்டாவது பெரிய கையடக்கத் தொலைபேசி உற்பத்தி நாடாக விளங்கும் இந்தியா, கையடக்கத் தொலைபேசிகளை ஏற்றுமதி செய்யும் ஐந்து முக்கிய நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது என்று இந்தியாவின் இலத்திரனியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப மத்திய இராஜாங்க அமைச்சர் ரஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த நிதியாண்டில் 85 ஆயிரம் கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட பெறுமதி கொண்ட கையடக்கத் தொலைபேசிகளை ஏற்றுமதி செய்துள்ள எமது நாடு, இவ்வருடம் நிறைவடையும் போது ஒரு இலட்சம் கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட பெறுமதி கொண்ட கையடக்கத் தொலைபேசிகளை ஏற்றுமதி செய்யும்’ என்றும் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், இந்திய செலியூலர் அன்ட் இலக்ட்ரொனிக்ஸ் அசோசியேசன் வழங்கியுள்ள தரவுகளின்படி, 2022-2023 நிதியாண்டில் 10 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான ஸ்மார்ட் போன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது கடந்த நிதியாண்டை விடவும் இந்நிதியாண்டில் இரு மடங்கு ஏற்றுமதி அதிகரிப்பாகும். இதற்கு உற்பத்தியை அடிப்படையாகக் கொண்ட ஊக்குவிப்புகளே முக்கிய காரணம்.
கையடக்கத் தொலைபேசி ஏற்றுமதியில் ஐக்கிய அரபு இராச்சியம், அமெரிக்கா, பிரித்தானியா, இத்தாலி, நெதர்லாந்து ஆகிய நாடுகள் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. அந்நாடுகளுடன் தற்போது இந்தியாவும் இணைந்து கொண்டுள்ளது. இதன் ஊடாக உலகில் கையடக்கத் தொலைபேசி ஏற்றுமதி செய்யும் ஐந்து முக்கிய நாடுகளில் எமது நாடும் ஒன்றாகியுள்ளது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் 97 வீதமான ஸ்மார்ட் போன்கள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுபவை’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்திய செலியூலர் அன்ட் இலக்ட்ரொனிக்ஸ் சங்கத்தின் தலைவர் பங்கஜ் மொஹிந்த்ரூ, ‘கையடக்கத் தொலைபேசி கைத்தொழில் உற்பத்தி இவ்வருடம் 40 பில்லியன்அமெரிக்க டொலர்களை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகின்ற அதேநேரம், அவற்றில் 25 வீத ஏற்றுமதி 10 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருக்கும் என்றுள்ளார்.