ஜனநாயகத்தை தவறாக வழி நடத்தி அரச விரோத செயற்பாட்டை உருவாக்க எவரேனும் முயற்சி செய்வார்களாயின் அதற்கு இடமளித்து அரசால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அரச நிர்வாகத்தை மேற்கொள்ளும் போது சில தேவைகளுக்கமைய சட்டங்களை நிறைவேற்றி அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்கர் வணக்கத்திற்குரிய ஆனமடுவே தம்மதஸ்ஸி தேரர் தெரிவித்துள்ளார்.
சுதந்திரத்தை அளவுக்கதிகமாக அனுபவித்தால் நாட்டில் பிரச்சினை ஏற்பட்டு அரசாங்கமும் மக்களும் சிரமத்துக்குள்ளாக நேரிடுமென நாம் புரிந்து கொள்ள வேண்டியுள்ளதெனவும் அவர் தெரிவித்தார்.
சுதந்திர மக்கள் பேரவையை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களான
டலஸ் அழகப் பெரும, பேராசிரியர் ஜி.எல்.பிரீஸ், டிலான் பெரேரா, வசந்த யாப்ப பண்டார, உதயன கிரிந்திகொட, முன்னாள் நகர சபை உறுப்பினர் ஆனந்த சனத்குமார ஆகியோர் நேற்று (20) அஸ்கிரி மகா விகாரைக்கு விஜயம் செய்த போதே அவர் இதனை தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் குறித்து மல்வத்தை, அஸ்கிரிய மகாநாயக்க தேரர்கள் இருவருக்கும் தெரிவிப்பதற்காக அவர்கள் அவ் விஹாரைகளுக்கு விஜயம் செய்தனர்.
மல்வத்த மகாநாயக்க தேரர் அதிவணக்கத்துக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரரை சந்தித்து விடயங்களை தெரிவித்த பின்னர் டலஸ் அழகப் பெரும உள்ளிடோர் அஸ்கிரிய விகாரைக்கு சென்று அதிவணக்கத்துக்குரிய வரக்காகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டனர்.இவ் வேளையில் அஸ்கிரிய பிரிவின் அனு நாயக்கர் வணக்கத்துக்குரிய ஆனமடுவே தம்மதஸ்ஸி, ஆவணப்படுத்துனர் மெதகம தம்மாநந்த, சிரேஷ்ட செயற்குழு சங்க சபை உறுப்பினர் கொடகம மங்கள ஆகிய தேரர்களும் அங்கு சமுகமளித்திருந்தனர்.