இலங்கையிலுள்ள ஒரு லட்சம் குரங்குகளை சீனாவிற்கு அனுப்புவது தொடர்பில் தற்போது இலங்கையில் மாத்திரமன்றி சர்வதேச மட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
சீனாவிற்கு ஒரு லட்சம் குரங்குகள் அனுப்புகின்றமை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சமீபத்தில் இலங்கை விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட மேலும் சில நாடுகளிடமிருந்தும் குரங்குகளை பெற்றுக்கொள்வதற்கான கோரிக்கை கிடைக்கப் பெற்றுள்ளதாக விவசாய அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் நகர் பகுதிகள் உள்ளிட்ட மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் குரங்குகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது.
விவசாய அமைச்சின் தரவுகளுக்கு அமைய, நாட்டில் 30 லட்சத்திற்கும் அதிகமான குரங்குகள் உள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
இவ்வாறு மக்கள் செறிந்து வாழும் பகுதிகளிலுள்ள குரங்குகள், விளை நிலங்களுக்குள் பிரவேசித்து, பயிர்களை சேதப்படுத்துவதாகவும் அவர் கூறுகின்றார்.
குறிப்பாக தென்னை, சோளம், நெல் உள்ளிட்ட செய்கைகளுக்கு குரங்குகளினால் பாரிய சேதம் விளைவிக்கப்பட்டு வருகின்றன.
பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் மிருகங்களில், குரங்குகளே அதிகளவாக காணப்படுகின்றது என விவசாய அமைச்சர் கூறுகின்றார்.
குரங்குகளுக்கு மேலதிகமாக பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் அணில்கள், மயில்கள் மற்றும் பன்றிகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவது குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சீனாவிலுள்ள 1,000 மிருகக்காட்சி சாலைகளுக்கு ஒரு லட்சம் குரங்குகள் கோரப்பட்டதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அண்மையில் கருத்து வெளியிட்டார்.
இந்த கருத்தானது, உள்நாட்டில் மாத்திரமன்றி சர்வதேச ரீதியில் பாரிய பேசுபொருளாக மாறியது.
சீனா, இறைச்சிக்காக குரங்குகளை கோருவதாக சிலர் கூறிய நிலையில், மற்றுமொரு தரப்பினர் ஆராய்ச்சிகளுக்கான குரங்குகளை சீனா கோருவதாகவும் கருத்துரைத்திருந்தார்கள்.
எனினும், அந்த கருத்துக்களை விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, பிபிசி தமிழிடம் மறுத்திருந்தார்.
இலங்கையிலிருந்து ஒரு லட்சம் குரங்குகளை கோரியதாக வெளியான தகவல் தொடர்பில் கொழும்பிலுள்ள சீன தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி, இலங்கையிலுள்ள ஒரு லட்சம் குரங்குகளை தாம் கோரவில்லை என இலங்கையிலுள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கையிலிருந்து குரங்குகளை பெற்றுக்கொள்கின்றமை தொடர்பில் தமக்கு எந்தவொரு கோரிக்கையும் விடுக்கப்படவில்லை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான கோரிக்கை தொடர்பில் தமது நிறுவனம் எந்தவொரு வகையிலும் அறிந்திருக்கவில்லை என சீனாவிலுள்ள வல விலங்குகள், தாவரவியல் இறக்குமதி, ஏற்றுமதிக்கான அரச திணைக்களமாக விளங்கும் சீன தேசிய வனவியல் மற்றும் புல்வெளி நிர்வாகம் தெரிவித்துள்ளதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அழிந்துவரும் உயிரினங்கள், தாவரங்களின் சர்வதேச வர்த்தகம் தொடர்பான மாநாட்டில் 1988 ஆம் ஆண்டு ஒரு பங்காளி நாடாக தாம், வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தை திருத்தங்களுடன் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வனவிலங்கு பாதுகாப்பிற்கு சீனா, அனைத்து சந்தர்ப்பங்களிலும் முன்னுரிமை வழங்கும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கான சர்வதேச கடமைகளை தீவிரமாக தமது நாடு நிறைவேற்றும் எனவும் கொழும்பிலுள்ள சீன தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாம் குரங்குகளை இலங்கையிடமிருந்து கோரவில்லை என சீன தூதரகம் வெளியிட்ட அறிக்கை தொடர்பில், விவசாய அமைச்சின் செயலாளர் குணதாஸ சமரசிங்க பதிலளித்தார்.
சீன அரசாங்கத்திடமிருந்து தமக்கு இந்த கோரிக்கை விடுக்கப்படவில்லை எனவும், சீனாவில் மிருகக்காட்சிசாலைகளை நடத்தும் தனியார் நிறுவனமொன்றிடமிருந்தே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் விவசாய அமைச்சின் செயலாளர் குணதாஸ சமரசிங்க தெரிவிக்கின்றார்.
மிருகங்களினால் நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்னைகள் விதத்திலும், விவசாய அமைச்சு என்ற விதத்திலும் தாம் இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தியதாக அவர் கூறுகின்றார்.
சீனாவிலுள்ள தனியார் நிறுவனம் தம்மிடம் கோரிக்கை விடுத்தமைக்கான எழுத்துமூல ஆவணங்கள் தம்வசம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
சீன அரசாங்கத்தின் நேரடி தொடர்புகள் எதுவும் இந்த விடயத்தில் காணப்படவில்லை என கூறிய அவர், குறித்த தனியார் நிறுவனத்துடனேயே தொடர்கள் காணப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள பிரச்னைகள் அடுத்து, இந்த நிறுவனத்தின் கோரிக்கை குறித்து ஆராய வேண்டிய கட்டாயம் தமக்கு ஏற்பட்டதாகவும் அவர் கூறுகின்றார்.
சீனாவிலுள்ள இந்த நிறுவனம், தமது அமைச்சின் அதிகாரிகளுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.
ஒரு லட்சம் குரங்குகளை ஒரே தடவையில் அவர்கள் கோரவில்லை என குறிப்பிட்ட அவர், கட்டம் கட்டமாகவே குரங்குகளை அவர்கள் கோரியதாகவும் தெரிவிக்கின்றார்.
குரங்குகளினால் நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்னைகளை அடுத்து, இந்த விடயம் தொடர்பில் தமது அமைச்சு கவனம் செலுத்தியதாகவும் அமைச்சின் செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.
வனப் பகுதியிலுள்ள குரங்குகளை பிடித்து, சீனாவிற்கு அனுப்பும் எண்ணம் தமக்கு கிடையாது எனவும், விளை நிலங்களுக்கு சேதம் விளைவிக்கும் பகுதிகளிலுள்ள குரங்குகளை மாத்திரமே அனுப்புவதற்கான எண்ணம் உள்ளதாகவும் விவசாய அமைச்சின் செயலாளர் குணதாஸ சமரசிங்க தெரிவிக்கின்றார்.
(பிபிசி தமிழ்)