பாதி படப்பிடிப்புடன் 1,000 படங்கள் நின்றுபோனதாக தயாரிப்பாளர் தெரிவித்து உள்ளார்.
‘ஜம்பு மகிரிஷி’ என்ற படத்தை தயாரித்து இருப்பவர் பாலாஜி. இவரே படத்தில் கதாநாயகனாக நடித்து டைரக்டும் செய்துள்ளார்.
ராதாரவி, டெல்லி கணேஷ், பிரபாகர் உள்ளிட்ட மேலும் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் தயாராகி உள்ளது.
பட விழா நிகழ்ச்சியில் பாலாஜி பேசும்போது, “ஜம்பு மகிரிஷி சித்தரின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகி உள்ளது. சிறுபட்ஜெட் படம் எடுக்கும் தயாரிப்பாளர்களிடம் சில இயக்குனர்கள் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றுகிறார்கள்.
தயாரிப்பாளர் நடுரோட்டில் நிற்கிறார். தமிழ் சினிமாவில் 1,000 படங்கள் பாதி படப்பிடிப்புடன் நிறுத்தப்பட்டு உள்ளன. தணிக்கை சான்றிதழ் பெற்றும் வெளிவராமல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்கள் உள்ளன.
படத்தை விற்று தருவதாக சொல்லும் சில விநியோகஸ்தர்கள் லட்சக்கணக்கில் கமிஷன் கேட்கிறார்கள்.
தமிழ் சினிமா தற்போது கமிஷன் அடிப்படையில்தான் செயல்படுகிறது. ஜம்பு மகிரிஷி படப்பிடிப்பில் சண்டைக்காட்சியின்போது சண்டை பயிற்சி இயக்குனருக்குள் மோதல் ஏற்பட்டு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
சண்டை பயிற்சி இயக்குனர் பிரச்சினை செய்து படப்பிடிப்பை நிறுத்தியதால் எனக்கு லட்சக்கணக்கில் இழப்பு ஏற்பட்டது” என்றார்.