யாழ்ப்பாணம் நெடுந்தீவில் வீடொன்றில் வைத்து மூன்று வயோதிப பெண்கள் உட்பட ஐவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் நேற்று (22) இரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
சந்தேகநபரான 51 வயதுடைய நபரிடம் இருந்து மூன்று தங்க நெக்லஸ்கள், இரண்டு ஜோடி தங்க வளையல்கள், தனி வளையல் ஒன்று, 8 மோதிரங்கள், இரண்டு காதணிகள் மற்றும் ஒரு பென்டன்ட் மற்றும் இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் ஜேர்மனியில் சுமார் 20 வருடங்கள் வாழ்ந்து பின்னர் இந்நாட்டுக்கு வந்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
புங்குடுதீவு பகுதியிலுள்ள அமைந்துள்ள வீடொன்றில் மறைந்திருந்த நிலையில் சந்தேக நபரை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் நெடுந்தீவின் மாவேலி பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று அதிகாலை இந்த கொடூரமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதில் இரண்டு ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் கொல்லப்பட்டனர்.
மேலும், வெட்டுக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் உள்ள மற்றுமொரு பெண்ணை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் வெளிநாட்டில் இருந்து இலங்கை திரும்பியுள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர்கள் அனைவரும் வயது முதிர்ந்தவர்கள் எனவும், அவர்கள் உறவினர்கள் எனவும் பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.