அரசியலமைப்புக்கு அமைய ஆட்சி மாற்றம் ஏற்படும் வரை ஜனாதிபதி, பிரதமர் பதவிகளில் மாற்றம் ஏற்படாது என்பதுடன், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு பிரதமர் பதவி வழங்க வேண்டிய தேவை ஏதும் கிடையாது எனவும், வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஏனெனில், நெருக்கடியான சூழலில் தலைமைத்துவத்தை ஏற்கும் தைரியம் அவருக்கு கிடையாது எனவும், அவர் தெரிவித்துள்ளார்.
கடுவலை பகுதியில் நேற்று முன்தினம் (22) நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைப்பாளர் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டத்தில் அவர் மேலும் தெரிவித்த போது, “பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படவுள்ளதாக தவறான செய்திகள் வெளியாகியுள்ளன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர் தினேஷ் குணவர்தனவை பிரதமராக நாமே தெரிவு செய்தோம். ஆகவே, பிரதமர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய தேவை ஏதும் கிடையாது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கவை தெரிவு செய்ய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எடுத்த தீர்மானம் சரியானது என்பதை நாட்டு மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். அரசியலமைப்புக்கு அமைய ஆட்சி மாற்றம் ஏற்படும் வரை ஜனாதிபதி, பிரதமர் பதவிகளில் மாற்றம் ஏற்படாது.
தேசிய அரசாங்கத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு பிரதமர் பதவியை வழங்க வேண்டிய தேவை ஏதும் கிடையாது. நெருக்கடியான சூழலில் தலைமைத்துவத்தை ஏற்கும் தைரியம் எதிர்க்கட்சித் தலைவருக்கு கிடையாது. பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்த போது, அரசாங்கத்தை பொறுப்பேற்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, எதிர்க்கட்சி தலைவரிடம் பல முறை கோரிக்கை விடுத்தார்.
ஆசை. ஆனால், அச்சம் என்பதால் அரசாங்கத்தை அவர் பொறுப்பேற்கவில்லை. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறுகிய காலத்துக்குள் நாட்டை வழமைக்கு கொண்டு வந்துள்ளார். ஆகவே, ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகளில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய தேவை கிடையாது. எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள தேர்தல்களில் கூட்டணியாக போட்டியிட எதிர்பார்த்துள்ளோம்” என்றார்.