வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தழுவியதாக பொது நிர்வாக முடக்கப் போராட்டத்தை நாளை (25) நடத்துவதற்கு 7 தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து அழைப்பு விடுத்துள்ளன.
இது தொடர்பாக நேற்று முன்தினம் (22) தனியார் விடுதியொன்றில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே, இந்த விடயம் தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன், புளொட் தலைவர் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் ஶ்ரீகாந்தா, ரெலோவின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் ஆகியோர் கலந்துகொண்டு தமது கருத்துகளை வௌியிட்டனர்.
வடக்கு, கிழக்கில் இராணுவமயமாக்கலை நிறுத்துமாறு கோரியும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிப்புத் தெரிவித்தும் இந்த நிர்வாக முடக்கப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும், இந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.