உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கை கத்தோலிக்க ஆயர் பேரவையிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் ஒப்புதலுடன் அமைச்சர் டிரன் அலஸ் அறிக்கையின் பிரதியொன்றை கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர் அருட்தந்தை ஹெரோல்ட் அந்தோனி பெரேராவிடம் கையளித்துள்ளார்.
——-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், வாக்குமூலம் வழங்குவதற்காக நாளை 24ஆம் திகதி பயங்கரவாத விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு முன்னாள் சட்ட மாஅதிபர் தப்புல டி லிவேராவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நாளையும் அவர் ஆஜராகாவிட்டால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் முன்னாள் சட்ட மாஅதிபருக்கு எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றும் பயங்கரவாத விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்த போதிலும் அவர் வருகை தரவில்லை.
தற்போதைய சட்ட மாஅதிபருடனும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் நடத்தும் சந்திப்பு காரணமாக தன்னால் ஆஜராக முடியாதென முன்னாள் சட்ட மாஅதிபர் தப்புல டி லிவேரா கடிதம் மூலம் பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் சட்ட மாஅதிபர் தப்புல டி லிவேரா, வாக்குமூலம் பெறுவதற்காக கடந்த 20 ஆம் திகதி பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்த போதிலும் அவர் ஆஜராகியிருக்கவில்லை. அவர் சார்பில் சட்டத்தரணி ஒருவர் அங்கு ஆஜரானார்.
இதன்போது உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குமாறு பயங்கரவாத விசாரணைப் பிரிவு விடுத்த அழைப்பு தொடர்பில் அவர் அந்த சட்டத்தரணியூடாக 07 பக்க எழுத்து மூல எதிர்ப்பை முன்வைத்திருந்தார்.
2021ஆம் ஆண்டு சட்ட மாஅதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் கருத்து வெளியிட்டிருந்த தப்புல டி லிவேரா, ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னணியில் பாரிய சதித்திட்டம் இடம்பெற்றிருந்ததாகவும் அது தொடர்பில் அனைவரும் சாட்சிகள் ஊடாக கண்டறிய வேண்டுமென்றும் கூறியிருந்தார்.
இக்கருத்து தொடர்பில் முன்னாள் சட்ட மாஅதிபர் தப்புல டி லிவேராவிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ள வேண்டுமென கருதினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை பல்வேறு சந்தர்ப்பங்களில் வலியுறுத்தி இருந்தார். இவ்வாறான பின்னணியிலேயே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக முன்னாள் சட்ட மாஅதிபர் தப்புல டி லிவேரா நேற்றும் பயங்கரவாத விசாரணை பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.