மாவட்ட ரீதியான பிரச்சினைகளை சபையில் எடுத்துரைக்கும் போது புலிகள் என குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் எம்பி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றும் வழிமுறைகளை ஆளும் தரப்பு அமைச்சர் கற்றுக்கொள்ள வேண்டும் என சபையில் குறிப்பிட்ட அவர், பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனை புலி என்று அமைச்சர் மனுஷ நாணயக்கார கூறுவதை நீங்கள் அனுமதிக்கின்றீர்களா என்றும் அவர் சபை முதல்வர் சுசில் பிரேம ஜயந்தவிடம் கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் நேற்று கிழக்கு மாகாணத்தில் படுவான் கரை மட்டும் எழுவான் கரை பிரதேசத்தில் நிலவும் படகு சேவை தொடர்பில் சாணக்கியன் எம்பி கேள்வி ஒன்றை எழுப்பினார்.
அதன்போது ஏற்பட்ட சர்ச்சையிலேயே மனுஷ நாணயக்கார எம்பி சாணக்கியன் எம்பியை புலி என குறிப்பிட்டார்.
அதன் போது சாணக்கியன் எம்பி தொடர்ந்தும் தமிழன், கிழக்கு மாகாணத்தவன் என்பதனால்தான் சபையில் கேள்விகளுக்கு பதில் வழங்க அனுமதி மறுக்கப்படுவதாகவும் இதுதான் அரசின் இனவாதம் எனவும் தெரிவித்தார்.
இதன் போது அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கும் சாணக்கியனுக்குமிடையில் தர்க்கம் ஏற்பட்டது. சாணக்கியனைப் பார்த்து நீங்கள்தான் இனவாதி.நாம் வடக்கு,கிழக்கு என்று பிரித்துப்பார்ப்பதில்லை. நீங்கள்தான் நான் கிழக்கு மாகாணத்தவன் என இனவாதம் பேசுகின்றீர்கள்.புலி வெளியே பாய்ந்து விட்டது.புலியின் உண்மை முகம் வெளிப்படுகின்றது.
பிரச்சனைகளை தீர்ப்பதற்கு உங்களைப்போன்றவர்கள்தான் தடையாக இருக்கின்றார்கள் வாயை மூடிக்கொண்டிருங்கள் என அமைச்சர் அதன் போது குறிப்பிட்டார். அதன்போது குறுக்கிட்ட சுமந்திரன் எம்.பி ஒழுங்குப்பிரச்சினை ஒன்றை எழுப்பியதுடன் சாணக்கியன் எம்.பி.யை அமைச்சர் மனுஷ நாணயக்கார புலி என்கின்றார். மாவட்ட ரீதியான பிரச்சினைகளை சபையில் எடுத்துரைக்கும் போது புலிகள் என குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
பாராளுமன்றத்தில் உரையாற்றும் வழிமுறைகளை ஆளும் தரப்பு அமைச்சர் கற்றுக்கொள்ள வேண்டும். சாணக்கியனை புலி என்று அவர் கூறுவதனை சபை முதல்வரே நீங்கள் அனுமதிக்கின்றீர்களா? எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அமைச்சர் கூறிய விடயத்தில் புலி என்ற சொல் தெரிவிக்கப்பட்டிருந்தால் அது ஹன்சாட்டிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அதனையடுத்து அவ்வாறான வார்த்தைப்பிரயோகத்தை ஹன்சாட்டிலிருந்து நீக்குமாறு பிரதி சபாநாயகர் சபையில் தெரிவித்தார்.
அதன்பின்னர் சாணக்கியன் எம்.பி தனது கருத்தினைக்கூற ஒரு நிமிடம் வழங்கப்பட்டது. அதன்போது தமது கருத்தை முன்வைத்த சாணக்கியன் எம்.பி. நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ, வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி ஆகியோரை விமரிசிக்கவே அமைச்சர் அலிசப்ரிக்கும் சாணக்கியனுக்குமிடையில் சபையில் கடுமையான தர்க்கம் ஏற்பட்டது.