உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடாத்த நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கை கத்தோலிக்க ஆயர் பேரவையிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய, குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கை அமைச்சர் டிரான் அலஸ்ஸினால் கத்தோலிக்க ஆயர் பேரவை தலைவர் அருட்தந்தை ஹெரால்ட் அந்தனியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை கடந்த 2021 பெப்ரவரி 01ஆம் திகதி ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஆணைக்குழுவின் தலைவர் உயர்நீதிமன்ற நீதிபதி ஜனக் டி சில்வாவினால் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.
இதன் முதலாவது இடைக்கால அறிக்கை 2019 டிசம்பர் 20 ஆம் திகதியும் இரண்டாவது இடைக்கால அறிக்கை 2020 மார்ச் 02 ஆம் திகதியும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன.
உயிர்த்த ஞாயிறு தொடர் பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்கவும், விசாரணைகள் மூலம் கண்டறியப்படும் தகவல்களின் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகளை பரிந்துரைக்கவும் 2019 செப்டம்பர் 22ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.
எட்டு தற்கொலை குண்டுதாரிகளால் 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி ஹோட்டல்களையும் கத்தோலிக்க தேவாலயங்களையும் இலக்கு வைத்து தொடர் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.
கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், கட்டுவாப்பிட்டி புனித செபஸ்டியன் தேவாலயம், மட்டக்களப்பு சியோன் தேவாலயம், ஷங்க்ரி-லா, கிங்ஸ்பரி மற்றும் சினமன் கிரேண்ட் ஹோட்டல்கள் ஆகியன தாக்குதலுக்கு இலக்காகின.
தெமட்டகொடை மற்றும் தெஹிவளையில் இரண்டு பயங்கரவாதிகள் குண்டுகளை வெடிக்கச் செய்து தற்கொலை செய்துகொண்டனர்.
இந்த தொடர் தாக்குதல்களில் சுமார் 270 பேர் உயிரிழந்ததுடன், சுமார் 500 பேர் காயமடைந்தனர்.
ஆணைக்குழு 214 நாட்களில் 457 பேரிடமிருந்து சாட்சிகளை பதிவு செய்தது. அவர்களில் அரசியல், பாதுகாப்பு சேவைகளை சேர்ந்தவர்கள், அனர்த்தத்திற்கு முகம்கொடுத்த மற்றும் அது தொடர்பான செயற்பாடுகளுடன் சம்பந்தப்பட்டவர்களும் அடங்குவர்.
இந்த அறிக்கை 472 பக்கங்கள், 215 இணைப்புகள் மற்றும் 06 தொகுதிகளை கொண்டதாகும்.