மணிரத்னம் இயக்கத்தில் உருவான ‘பொன்னியின் செல்வன் 2’ படம் அனைத்து மொழிகளிலும் சேர்த்து ரூ.30 கோடி முதல் ரூ.32 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை இயக்குநர் மணிரத்னம் 2 பாகங்களாகத் திரைப்படமாக்கி இருக்கிறார். இதன் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. லைகா நிறுவனமும் மெட்ராஸ் டாக்கீஸும் இணைந்துத் தயாரித்திருந்த இந்தப் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், லால் உட்பட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
படத்தின் இரண்டாம் பாகம் நேற்று (ஏப்ரல் 28) திரையரங்குகளில் வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் இப்படம் முதல் நாளில் அனைத்து மொழிகளிலும் ரூ.30 கோடி முதல் ரூ.32 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் படம் ரூ.18 கோடி முதல் ரூ.20 கோடி வரை வசூலித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
கடந்தாண்டு செப்டம்பர் 30-ம் தேதி வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகம் உலக அளவில் ரூ.80 கோடியை வசூலித்து தமிழ் சினிமாவின் அதிகபட்ச முதல்நாள் வசூல் சாதனையை படைத்திருந்தது. படத்தின் முதல் பாகம் அதிகாலைக் காட்சிகளால் 4,500 திரைகளில் வெளியிடப்பட்டிருந்தது.
ஆனால், ‘பொன்னியின் செல்வன் 2’ அரசு உத்தரவை அடுத்து காலை 9 மணிக்கே முதல் காட்சி தொடங்கியதால் ஒட்டு மொத்தமாக 3,200 திரைகளில் படம் வெளியிடப்பட்டது. இரண்டு பாகங்களும் சேர்த்து ரூ.500 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.