சர்வதேச நாணய நிதியம் மூலம் நாட்டிற்கும் பொருளாதாரத்திற்கும் ஏற்படும் அழிவுகளுக்கு எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் ஒப்புதல் அளித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியம் தொடர்பான பாராளுமன்ற வாக்கெடுப்பின்போது, சபையில் சமுகமளிக்காததன் மூலம் நிதி வசதி ஒப்பந்தத்துக்கு அவர்கள் ஒப்புதல் வழங்கியுள்ளதாக ஜே.வி.பியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைக்கு பாராளுமன்றத்தினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என்பதை மட்டுமே காட்ட விரும்புவதாக அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். எனினும் அதை எதிர்க்கும் முதுகெலும்பு ஐக்கிய மக்கள் சக்திக்கு இல்லை என்றும் ஹந்துன்நெத்தி குறிப்பிட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையில் கையொப்பமிடுவதற்கு முன்னர் உடன்படிக்கைக்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். எனினும் உடன்படிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முன்னரே கையெழுத்திடப்பட்டது. இந்தநிலையில் வாக்குப்பதிவின் போது அவர்கள் எதிர்த்திருக்க வேண்டும். இதனை விடுத்து சபையில் இல்லாமல் இருந்தமையானது உடன்படிக்கைக்கு ஒப்புதல் வழங்குவதற்கு சமனானதாகும். எனவே அன்றைய வாக்கெடுப்பின்போது சபையில் பிரசன்னமாகாமல் இருந்த அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதிராக ஐக்கிய மக்கள் சக்தி, ஒழுக்காற்று விசாரணை நடத்த வேண்டும். இதனை விடுத்து உடன்படிக்கைக்கு ஆதரவாக வாக்களித்த பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசிக்கு எதிராக மாத்திரம் ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படவுள்ளமை ஏற்கத்தக்கதல்ல என்றும் ஹந்துன்நெத்தி குறிப்பிட்டுள்ளார்.