இலங்கையின் பிரபல சிரேஷ்ட சிங்கள சினிமா, நாடகம், தொலைக்காட்சி நடிகர் ஜீ.ஆர்.பெரேரா தனது 83ஆவது வயதில் காலமானார்.
1939 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் திகதி பிறந்த கல்ஹேனகே ரத்னபால பெரேரா, 600 இற்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.
1971 ஆம் ஆண்டு டி.பி. நிஹால்சிங்க இயக்கிய ‘வெளிக்கதர’ திரைப்படத்தின் மூலம் சிறிய வேடத்தில் தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கிய ஜீ.ஆர்.பெரேரா, தனது இரண்டாவது திரைப்படமான மெணிக் சந்தரசாகர இயக்கிய ‘களு திய தஹர’ திரைப்படத்தில் முதன்முதலில் முக்கிய வேடத்தில் தோன்றினார்.
திஸ்ஸ அபேசேகர இயக்கிய ‘துன்கல் சிஹினய’ தொடரின் மூலம் முதலாவு தொலைக்காட்சி நாடகத்தில் பாத்திரம் ஏற்ற அவர், ‘தூ தருவோ’ நாடகத்தில் அவர் நடித்த ‘மலக்கட பாஸ்’ பாத்திரம் அவரது தொலைக்காட்சி வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது.
அவர் 3 இந்திய திரைப்படங்களிலும், 2 அமெரிக்க மற்றும் ஒரு ஜேர்மனிய திரைப்படங்கள் உட்பட 6 வெளிநாட்டு திரைப்படங்களில் நடித்துள்ளார்.
1980 இல் ‘கருமக்காரயோ’ திரைப்படத்தில் நடித்ததற்காக (Critics Awards) விமர்சக விருது பெற்றார். 2007 ஆம் ஆண்டில், சிறந்த துணை நடிகருக்கான விருதை ‘சக்ராயுதய’ எனும் தொலைகாட்சியில் நடித்ததற்காக அவர் வென்றார்.
ரைகம் டெலிஸ் (Raigam Tele’es) விருது விழாவில் அதிக எண்ணிக்கையிலான தொலைக்காட்சி நாடகங்களில் நடித்தமைக்காக விருதையும் வென்றுள்ளார்.
நீண்ட நாட்களாக சுகவீனமுற்றிருந்த ஜீ.ஆர். பெரேரா இன்று அவரது இல்லத்தில் காலமானதாக அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அவரது இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகள் பின்னர் அறிவிக்கப்படும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.