சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: மூளை மற்றும் முதுகு தண்டுவடப்பகுதியில் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய கட்டிகளை கண்டறியும் வகையில் மெஷின் லேர்னிங் சார்ந்த கணினி தொழில்நுட்பத்தை சென்னை ஐஐடி விஞ்ஞானிகள் குழு உருவாக்கியுள்ளது.
இக்குழுவில் ஐஐடி உயிரி தொழில்நுட்பத்துறை பேராசிரியர் மைக்கேல் குரோமிஹா, ஆராய்ச்சி மாணவி மேத்தா பாண்டே. தனுஷா யேசுதாஸ், அனுஷா பருச்சூரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
அவர்கள் கண்டறிந்துள்ள புதிய கணினி தொழில்நுட்பம் மூலம் மூளை மற்றும் தண்டுவடத்தில் வளரும் புற்றுநோய் கட்டியையும் (க்ளையோபிளாஸ்டோமா), அதன் வளர்ச்சி மற்றும் அதற்கான சிகிச்சை வாய்ப்புகளையும் துல்லியமாக கண்டுபிடிக்கலாம்.
எந்த வகையான சிகிச்சையை நோயாளிக்கு அளிக்கலாம் என்பதையும் இதன் மூலம் கண்டறியலாம் என்பது இதன் சிறப்பு அம்சம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.