மே 06ஆம் திகதி இடம்பெறவுள்ள பிரிட்டனின் மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்துக் கொள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரிட்டன் நோக்கி பயணமாகியுள்ளார்.
இன்று (04) அதிகாலை பிரித்தானியாவுக்கு பயணமானார்.
எதிர்வரும் மே 06 ஆம் திகதி சனிக்கிழமை ஐக்கிய இராச்சியத்தின் (UK) வெஸ்ட்மின்ஸ்டர் அபே அரச குடும்ப தேவாலயத்தில் நடைபெறும் குறித்த முடிசூட்டு விழாவில் கலந்து கொள்ள உலகத் தலைவர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட முக்கிய விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரிட்டன் மன்னர் சார்ள்ஸ், முடிசூட்டு விழாவின் போது அணியவிருக்கும் நூற்றாண்டு பாரம்பரியமிக்க தங்கத்திலான ஆடைகள் தயார்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதில் மன்னர் சார்ள்ஸ் இரண்டு வரலாற்று சிறப்பு மிக்க ஆடைகளை அணியவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில் ஓர் ஆடை 1821 ஆம் ஆண்டு அப்போதைய மன்னர் 4ஆம் ஜோர்ஜுக்காகவும், மற்றொன்று 1911ஆம் ஆண்டு மன்னர் 5ஆம் ஜோர்ஜுக்காகவும் வடிவமைக்கப்பட்டவை. இந்த ஆடைகளை ராணி எலிசபெத் அவரது முடிசூட்டு விழாவின் போது அணிந்திருந்த நிலையில், 70 ஆண்டுகளுக்குப் பின்னர் அந்த ஆடைகள் மன்னர் சார்ல்ஸின் முடிசூட்டு விழாவில் பயன்படுத்த தயாராகி வருகின்றன.
மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் முடிசூட்டு விழாவில் கலந்து கொண்ட சுமார் 8,200 பேரிலிருந்து, இம்முறை கலந்துகொள்வோரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு 2,200 பேருக்கே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் ஒருவராக உள்ளார்.
1926ஆம் ஆண்டில் பிறந்த எலிசபெத் மகாராணி அம்மையார், 1952 இல் மகாராணியின் தந்தை ஆறாம் ஜோர்ச் மன்னரின் மறைவைத் தொடர்ந்து, 1953ஆம் ஆண்டு ஜூன் 02ஆம் திகதி பிரித்தானிய மகாராணியாக அரியணை ஏறினார்.
கடந்த 2022 செப்டெம்பர் 08ஆம் திகதி தனது தாயாரான எலிசபெத் மகாராணி காலமானதைத் தொடர்ந்து, மன்னர் சார்ள்ஸ் அரியணை ஏறியமை குறிப்பிடத்தக்கது.
மகாராணியின் இறுதிக்கிரியைகள் கடந்த வருடம் செப்டெம்பர் 19ஆம் திகதி இடம்பெற்றதோடு, குறித்த நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது பாரியார் மைத்திரி விக்ரமசிங்க ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.