கவர்னர் ஆர்.என்.ரவி தனியார் ஆங்கில செய்தித்தாளுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:- தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய சித்தா பல்கலைக்கழக மசோதா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மானிய குழு விதிகளுக்கு எதிராக சித்தா பல்கலைக்கழக மசோதா உள்ளது. 2 முறையும் பல்கலைக்கழக வேந்தராக முதல்-அமைச்சர் இருப்பார் என்று கூறப்பட்டுள்ளதால் மசோதா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசு எடுத்துக் கொள்வதால் மசோதாவை ஏற்க முடியாது. பல்கலைக்கழகங்களில் அரசியல் இருக்கக்கூடாது என்பதற்காகவே கவர்னர்கள் மூலம் துணைவேந்தர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட 8 பல்கலைக்கழகங்கள் சார்ந்த மசோதாக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுவரை 48 சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 3 சட்ட மசோதாக்கள் ஜனாதிபதியின் பரிசீலனையில் இருக்கின்றன.
திராவிட மாடல் என்பது காலாவதியான கொள்கை. காலாவதியான கொள்கைகளைக் கொண்டு திராவிட மாடல் என்ற பெயரில் ஆட்சி நடத்துகின்றனர். திராவிட மாடல் கொள்கைகள் ஒரே நாடு ஒரே பாரதம் கொள்கைக்கு எதிரானது.
கவர்னர் மாளிகையின் செலவு குறித்து உண்மைக்கு மாறான தகவல்களை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
நிதி செலவினங்களில் விதி மீறல் என்று தமிழ்நாடு நிதி அமைச்சர் கூறுவது அப்பட்டமான பொய். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறந்த மனிதர்; அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் எனக்கு நல்ல நட்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.