ஐக்கிய இராச்சியத்தின் தேசிய சுகாதார சேவையில் பொது மருத்துவராக பணியாற்றும் இலங்கையில் பிறந்த பிரித்தானிய மருத்துவர் ஹரின் டி சில்வா மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
கொரோனா தொற்று நோய் காலகட்டத்தில் பொது நடைமுறையில் அவர் ஆற்றிய சேவைகளுக்காக மருத்துவர் டி சில்வாவுக்கு பிரிட்டிஷ் எம்பயர் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.
சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவிற்கு அழைக்கப்படும் பிரித்தானிய சமூகங்களுக்கு அசாதாரன பங்களிப்புகளை வழங்கிய ‘சாதாரண’ மக்கள் குழுவில் கலாநிதி ஹரின் டி சில்வாவும் ஒருவர் என்பது சிறப்பம்சமாகும்.
பெருந்தொற்று ஏற்படுவதற்கு முன்னர் தென் யோக்ஷயரின் டொன்காஸ்டரில் வசித்து வந்த மருத்துவர் சில்வா, வீதி மருத்துவராக தன்னிச்சையாக முன்வந்து, காலை மற்றும் பிற்பகல் அறுவை சிகிச்சைகளுக்கு இடையில் மதிய உணவு இடைவேளையில் வீடற்ற மக்கள் குறித்து கவனம் செலுத்தினார்.
அத்துடன், கோஸ்டாரிகாவில் உள்ள குழந்தைகள் கிராமம் தொண்டு நிறுவனத்திலும் மருத்துவதாக பணியாற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மருத்துவர் ஹரின் டி சில்வா கூறுகையில், தான் சற்று பதற்றமாக உள்ளதாகவும் ஆனால் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வில் பங்குகொள்ள ஆவலுடன் உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதனிடையே, 450இற்கும் மேற்பட்ட பிரித்தானிய ஏகாதிபத்திய பதக்கம் வென்றவர்கள் மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்ள உள்ளனர்.