ஜனாதிபதியை நேற்று முன்தினம் சந்தித்த இரா. சம்பந்தன் அது குறித்து இந்தியத் தூதுவருக்கும் எடுத்துரைத்த நிலையில் இன்று அவரது தலைமையில் வடக்கு, கிழக்கு எம்.பிக்கள் இணைந்து சந்திக்கின்றனர்.
இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான முதற்கட்ட பேச்சுவார்த்தை இன்று வியாழக்கிழமை ஆரம்பமாகிறது.
இன்றும் நாளையும் நடைபெறவுள்ள பேச்சுவார்ததையில் இன்று வியாழன் மற்றும் நாளை வெள்ளிக்கிழமை நாட்களில் நடக்கவுள்ள சந்திப்புகளில் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் தமிழ் எம்.பிக்களை ஒரே நேரத்தில் சந்திக்க ஜனாதிபதி ரணில் இணக்கம் தெரிவித்துள்ளார். இதையடுத்து இச்சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவுடன் வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்டுத்தும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கவுள்ளனர்.
நேற்று முன்தினம் பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடந்த சந்திப்பின்போது ஜனாதிபதி தரப்பில் வடக்கு கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்களை ஒரே நேரத்தில் சந்திக்க இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண எம்.பிக்களை அழைக்காமல் வட மாகாண எம்.பிக்களை மாத்திரம் ஜனாதிபதி சந்திக்க முன்னர் ஏற்பாடாகியிருந்தது. ஆனால், இந்த சந்திப்பில் இதுவிடயம் பிரஸ்தாபிக்கப்பட்டதையடுத்து ஜனாதிபதி அந்த முடிவை மாற்றியுள்ளதாக கூட்டமைப்பு தரப்பினர் தெரிவித்தனர்.
இதேவேளை, இலங்கை – இந்திய ஒப்பந்தத்தில் வடக்கு – கிழக்கின் தனியலகு தொடர்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அந்த ஒப்பந்தத்தின் பிரகாரமே இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் எடுத்துரைத்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயிடம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நேற்று முன்தினம் நடத்திய பேச்சுக்கள் தொடர்பான முழு விபரங்களையும் இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லேக்கு எடுத்துரைத்த போதே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இரா சம்பந்தன் மேலும் தெரிவிக்கையில்,
“ஜனாதிபதியுடன் நேற்று முன்தினம் முதலில் சந்திப்பு நடைபெற்றது. வடக்கு – கிழக்கில் பெரும்பான்மையானவர்கள் தமிழ்பேசும் மக்கள். எந்த விடயமானாலும் வடக்கு – கிழக்கைப் பிரித்து செயற்றிட்டங்களை முன்னெடுக்க இடமளிக்கமாட்டோம்.
இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் வடக்கு – கிழக்கின் தனியலகு தொடர்பில் தெளிவாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. அந்த ஒப்பந்தத்தின் பிரகாரமே தீர்வு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். வடக்கு – கிழக்கைப் பிரித்து பேச்சு நடத்த விரும்பினால், எமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் அதில் பங்கேற்கமாட்டார்களென ஜனாதிபதியிடம் தெரிவித்தோம்.
எமது கருத்துக்களை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, வடக்கு – கிழக்கை இணைத்துத்தான்,சகல பேச்சுக்களும் முன்னெடுக்கப்படுமென பதிலளித்தார்.
ஜனாதிபதியுடனான பேச்சு முடிவடைந்த பின்னர் இந்தியத் தூதரகத்துக்கு தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை. சோ.சேனாதிராஜா, கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருடன் சென்றேன்.
சந்திப்பில், பேசப்பட்ட விடயங்களை இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேயிடம் விரிவாக எடுத்துரைத்தோம் என்றும் அவர் தெவித்தார்.