‘மாமன்னன்’ படத்தில் வடிவேலுவின் கையில் பச்சை குத்தப்பட்டுள்ள முகம் யாருடையது என்று சமூக வலைதளங்களில் விவாதம் கிளம்பியுள்ளது.
‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ படத்தைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கும் திரைப்படம் ‘மாமன்னன்’. ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், ஃபஹத் ஃபாசில் நடிக்கின்றனர். வடிவேலு பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பரவலாக கவனம் பெற்றது.
இந்த நிலையில், ‘மாமன்னன்’ படத்தின் ஸ்டில்ஸ் நேற்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின. இதில் வடிவேலுவின் குறிப்பிட்ட ஒரு புகைப்படம் விவாதத்தை கிளப்பியது. அந்த புகைப்படத்தில் வடிவேலுவின் கையில் ஒரு முகம் பச்சை குத்தப்பட்டுள்ளது. அந்த முகம் யாருடையது என்று பலரும் பலவிதமாக கருத்துகளை கூறி வருகின்றனர். வடிவேலுவின் கையில் பச்சை குத்தியிருப்பது மலையாள நடிகர் லால் என்று ஒரு தகவல் உலா வருகிறது. லால் இதற்கு முன்பு மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘கர்ணன்’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இன்னும் சிலர் ‘கர்ணன்’ படத்தில் வந்த ஏமராஜா கதாபாத்திரத்தைத் தான் வடிவேலு தன் கையில் பச்சை குத்தியிருக்கிறார் என்றும், ‘மாமன்னன்’ படம் ‘கர்ணன்’ படத்தின் தொடர்ச்சியாக இருக்கலாம் என்றும் சிலர் கூறி வருகின்றனர். எனினும் இது குறித்து படக்குழு இதுவரை எந்தவொரு குறிப்பையும் வெளியிடவில்லை. இப்படத்திலும் லால் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் ட்ரெய்லர் வந்தால் மட்டும் நெட்டிசன்களின் இந்த கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.