கர்நாடகாவில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10ம் தேதி தேர்தல் நடைபெற்றது.

இதில், ஆளும் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், ஆம் ஆத்மி உள்பட பல்வேறு கட்சிகள் போட்டியிட்டன.

பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க 113 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும். இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது.

இதில், 129 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலைபெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு 113 தொகுதிகள் தேவை என்ற நிலையில் காங்கிரஸ் 129 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றுகிறது.

அதேவேளை, 66 தொகுதிகளில் மட்டும் முன்னிலையில் உள்ள பாஜக கர்நாடகத்தில் ஆட்சியை இழக்கிறது. கடந்த முறை 104 தொகுதிகளில் பாஜக வெற்றிபெற்ற நிலையில் இந்த முறை 66 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.

மேலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 22 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. சுயேட்சை வேட்பாளர்கள் 7 இடங்களில் முன்னிலையில் உள்ளனர். இதன் மூலம் 129 தொகுதிகளில் முன்னிலையில் உள்ள காங்கிரஸ் கர்நாடகாவில் தனிப்பெரும்பான்மையுன் ஆட்சி அமைக்க உள்ளது.

—–

கர்நாடகா சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 127 இடங்களிலும், பாஜக 68 இடங்களிலும், மஜத 22 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.

இந்நிலையில், முக்கிய தலைவர்களின் வாரிசுகளின் நிலை என்ன என்பதை பார்க்கலாம். ராமநகரா தொகுதியில் முன்னாள் முதல் மந்திரியும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான எச்.டி.குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி போட்டியிட்டார்.

அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் இக்பால் உசேன் நின்றார். பாஜக சார்பில் கவுதம் மாரிலிங்ககவுடா போட்டியிட்டார். தற்போது நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையின்படி, நிகில் குமாரசாமி பின்தங்கியுள்ளார்.

காங்கிரஸ் வேட்பாளர் இக்பால் உசேன், நிகில் குமாரசாமியை விட 9,609 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். 2018 சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸின் இக்பால் உசேனை தோற்கடித்து, ஜேடிஎஸ் கட்சியின் தலைவர் எச்டி குமாரசாமி இந்த தொகுதியில் வெற்றி பெற்றிருந்தார். இந்த தேர்தலில் தனது மகனை களமிறக்கினார் குமாரசாமி.

இந்நிலையில், நிகில் குமாரசாமி தோல்வி முகம் கண்டு வருகிறார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயின் மகன் பிரியங்க் கார்கே சித்தாப்பூர் தொகுதியில் களமிறங்கினார். அவரை எதிர்த்து மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில் சுபாஷ் சந்திர ரத்தோர், பாஜக சார்பில் மணிகண்ட ரத்தோட் ஆகியோர் போட்டியிடுகின்றனர். தற்போது நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையின்படி, பிரியங்க் கார்கே முன்னிலையில் உள்ளார்.

பாஜக வேட்பாளரை விட விட சுமார் 8,700 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார் பிரியங்க் கார்கே. கடந்த 2018 இல், பிரியங்க் கார்கே, பாஜகவின் வால்மிக் நாயக்கை 4,393 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

2013 தேர்தலிலும் சித்தாப்பூர் தொகுதியில் பிரியங்க் கார்கே வெற்றி பெற்றிருந்தார். பாஜக மூத்த தலைவரும், முன்னாள் முதல் மந்திரியுமான பி.எஸ்.எடியூரப்பாவின் மகன் பி.ஒய்.விஜயேந்திரா ஷிகாரிபுரா தொகுதியில் போட்டியிட்டார்.

அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் கோனி போட்டியிட்டார். தற்போது நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையின்படி, விஜயேந்திரா முன்னிலையில் உள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் அங்கு மிகக்குறைவான வாக்குகளையே பெற்றுள்ளார்.

ஷிகாரிபுரா தொகுதியில் எடியூரப்பா மகன் விஜேந்திரா : 19936. காங்கிரஸ் வேட்பாளர் கோனி : 1320 சுயேட்சை வேட்பாளர் நாகராஜ கவுடா 15,603

பெங்களூரு, டெல்லி, சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை அவர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். இதனிடையே கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கும் நிலையில் சிம்லாவில் உள்ள அனுமான் கோவிலில் பிரியங்கா காந்தி வழிபாடு செய்தார்.

பெங்களூர் யஷ்வந்தபுரத்தில் போட்டியிட் மந்திரி எஸ்டி சோமசேகர், துமகூரு மாவட்டம் சிக்கநாயக்கனஹள்ளியில் போட்டியிட்ட மந்திரி மாதுசாமி, சிக்பள்ளாப்பூரில் களமிறங்கிய மந்த்திரி சுதாகர், பெங்களூர் புறநகர் மாவட்டம் ஒசக்கோட்டையில் போட்டியிட்ட எம்டிபி நாகராஜ், பாகல்கோட்டை மாவட்டம் முதோல் தொகுதியில் போட்டியிட்ட கோவிந்த கார்ஜோள், மண்டியா மாவட்டம் கேஆர்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட மந்திரி நாராயணகவுடா, பல்லாரி புறநகர் தொகுதியில் போட்டியிடும் ஸ்ரீராமுலு உள்ளிட்டவர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

திரிதா ஹல்லி தொகுதியில் போட்டியிடும் மந்திரி ஞானேந்திரா தோல்வி முகத்தில் உள்ளார். இதனிடையே சித்தராமையாவை எதிர்த்து போட்டியிடும் பாஜக சோமண்ணா 2 தொகுதிகளிலும் பின்னடைவை சந்தித்துள்ளார். சிக்மகளூர் தொகுதியில் போட்டியிடும் பாஜகவின் சிடி ரவி பின்னடைவை சந்தித்துள்ளார்.

Related posts