குறட்டை சத்தம் என்பது நம்மில் பலருக்கும் அன்றாட வாழ்வில் ஒரு அங்கம் என்று சொல்லலாம். அது நம் மூலமாக பிறரோ அல்லது பிறர் மூலமாக நாமோ தினமும் எதிர்கொள்ளக் கூடும். ஆனால் அந்த குறட்டையால் ஒருவனது தனிப்பட்ட வாழ்வில் ஏற்படும் இழப்புகள் குறித்து உணர்வுப்பூர்வமாக அலசினால் அதுவே ‘குட் நைட்’.
சென்னையில் ஒரு ஐடி கம்பெனியில் பணிபுரியும் மிடில் கிளாஸ் இளைஞர் மோகன் (மணிகண்டன்). சூளைமேட்டில் ஒரு சிறிய வீட்டில் அம்மா, தங்கை, அக்கா, அக்காவின் கணவர் என கூட்டுக் குடும்பமாக வாழ்கிறார். மோகனுக்கு இருக்கும் குறட்டை பிரச்சினையால், அரும்பாக மலரத் தொடங்கிய அவரது காதல் கனவு, ஆரம்பத்திலேயே கலைந்து போகிறது. கடும் மன அழுத்தத்தில் இருக்கும் அவர், வாட்டர் ஃபில்டர் சர்வீஸுக்காக தன் அக்காவின் கணவர் (ரமேஷ் திலக்) உடன் ஒரு வீட்டுக்குச் செல்லும் போது அங்கு எதேச்சையாக நாயகி அனுவை (மீத்தா ரகுநாத்) சந்திக்கிறார்.
அவர்களுக்குள் மெல்ல உருவாகும் நட்பு, பின்பு காதலாக மாறி, திருமணம் வரை செல்கிறது. திருமணத்துக்குப் பின் தனிக்குடித்தனம் செல்லும் அவர்களது வாழ்வில் மோகனின் குறட்டையால் புயல் வீசத் தொடங்குகிறது.
நாயகனும் நாயகியும் அதிலிருந்து தங்களது மகிழ்ச்சியை மீட்டனரா? நாயகனின் குறட்டை பிரச்சினைக்கு தீர்வு கிடைத்தா போன்ற கேள்விகளுக்கு வெள்ளித் திரையில் விடை சொல்கிறது ‘குட் நைட்’.
நம் வாழ்வில் வெகு இயல்பான ஒன்றாகிப் போன குறட்டை என்ற ஒரு சிறிய பிரச்சினையை எடுத்துக் கொண்டு அதன் பின்னணியில் ஒரு நேர்த்தியான திரைக்கதையை உருவாக்கி அதில் வெற்றியும் பெற்றுள்ளார் இயக்குநர் விநாயக் சந்திரசேகரன். படத்தின் டைட்டில் கிரெடிட்ஸ் தொடங்கும்போதே பின்னணியில் குறட்டை சத்தமும் தொடங்கி நம்மை கதைக்கு தயார்படுத்தி விடுகிறது.
சென்னையின் மிடில் கிளாஸ் குடும்ப வாழ்க்கையை வெகு இயல்பாக காட்சிப் படுத்தியிருக்கிறார் இயக்குநர். அவர்களுக்கு இடையிலான உரையாடல்களும் எந்தவித செயற்கைத்தனங்களும் இல்லாமல் படு எதார்த்தமாக அமைக்கப்பட்டுள்ளன. ’வாட்டர் ஃபில்டர் போட வந்துட்டு எங்க அக்காவுக்கு வாக்கப்பட்டவன் தான நீ’ போன்ற டைமிங் வசனங்கள் அப்ளாஸ் அள்ளுகின்றன.
படத்தின் மிகப்பெரிய ப்ளஸ்களில் ஒன்று மணிகண்டனின் நடிப்பு. படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை தனது படு இயல்பான நடிப்பால் ஈர்க்கிறார். அவர் வெளிப்படுத்தும் உணர்வுகளும், உடல்மொழியும் பல காட்சிகளில் அபாரம். படம் முழுக்க பார்வையாளர்களின் கைதட்டலை பெறுகிறார். குறட்டையால் ஏற்படும் குற்ற உணர்ச்சியில் குன்றிப் போகும் காட்சிகளில் நேர்த்தியான நடிகராக மிளிர்கிறார். ‘ஜெய்பீம்’, ‘ஏலே’, தற்போது ‘குட் நைட்’ என மணிகண்டனின் சமரசமில்லாத கதைத் தேர்வு பாராட்டத்தக்கது.
படத்தின் மற்றொரு ப்ளஸ் அதன் கதாபாத்திர தேர்வு. நாயகியாக நடித்திருக்கும் மீத்தா ரகுநாத்துக்கு இது இரண்டாவது படம். ஒரு தேர்ந்த நடிகையாக வலம் வருவதற்காக அத்தனை அமசங்களும் அவரது நடிப்பில் வெளிப்படுகின்றன. தன்னை சுற்றி இருப்பவர்களின் வாழ்வில் நடந்த துர்சம்பவங்களுக்கு தானே காரணம் என்ற சோகத்தை எப்போதும் கண்களில் சுமந்து திரியும் கதாபாத்திரம்.
மணிகண்டனுக்கு இணையான கனமான கதாபாத்திரத்தை குறையேதும் சொல்லமுடியாதபடி செவ்வனே செய்திருக்கிறார்.
திருமணமாகி நீண்டநாட்களாகியும் குழந்தை இல்லாமல் சுற்றத்தாரின் பேச்சுகளை சகித்துக் கொண்டு வாழும் மணிகண்டனின் அக்காவாக வரும் ரேச்சல், மனைவிக்கும் மனைவியின் குடும்பத்துக்கும் ஆதரவான வீட்டோடு மாப்பிள்ளையாக நடித்திருக்கும் ரமேஷ் திலக், நாயகியின் பின்னணியை அறிந்து அவரை மகளாக பாவிக்கும் ஹவுஸ் ஓனர் பாலாஜி சக்திவேல் மற்றும் அவரது மனைவியாக நடித்திருப்பவர், எந்நேரமும் மணிகண்டனுக்கு குடைச்சல் கொடுக்கும் மேலதிகாரியாக வரும் பக்ஸ் ஆகியோர் படத்துக்கு நிறைவான பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
படம் முழுக்க வரும் நகைச்சுவை காட்சிகள் பல இடங்களில் அரங்கத்தை அதிரச் செய்கிறது. குறிப்பாக முதல் முறையாக நாயகி குடியிருக்கும் வீட்டுக்கு நாயகன் செல்லும்போது நடக்கும் சம்பவங்கள், திருமணமான மறுநாள் காலையில் குறட்டை சத்தம் தாங்காமல் மனைவி ஓடிவிட்டதாக மணிகண்டன் நினைப்பது உள்ளிட்ட காட்சிகள் உதாரணம்.
முதல் பாதியில் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கும் திரைக்கதை இரண்டாம் பாதியில் எங்கெங்கோ திசை மாறி அலைந்து திரிகிறது. மணிகண்டனின் அக்காவுக்கு நடக்கும் சீமந்தமும் அதனை தொடர்ந்து நடக்கும் நிகழ்வுகள், குழந்தை இறந்து பிறப்பது, மணிகண்டனின் தங்கையின் காதலன் வீட்டில் நடக்கும் பஞ்சாயத்து போன்ற காட்சிகள் இரண்டாம் பாதியை நிரப்புவதற்காக திணிக்கப்பட்டவை போல தோன்றுகின்றன.
படத்துக்கு சற்றும் தொடர்பே இல்லாமல் அவை இருப்பதால் அவை பார்ப்பவர்களுக்கு எந்தவொரு உணர்வு ரீதியான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. நாயகி எப்போதும் சோகத்துடன் இருப்பதற்கு சொல்லப்படும் காரணம் அழுத்தமானதாக இல்லை. குறட்டையை இயல்பாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லி முடிப்பதற்கு இரண்டாம் பாதியில் இவ்வளவு சுற்றி வளைத்திருக்க வேண்டியதில்லை.
இதனால் க்ளைமாக்ஸ் சொல்ல வரும் கருத்து ஒட்டாமல் போகிறது.
படத்தின் இசை மற்றும் ஒளிப்பதிவு குறிப்பிட்டு சொல்ல வேண்டியவை. பாடல்கள் ஓகே ரகம். ஷான் ரோல்டனின் பின்னணி இசை ஈர்க்கிறது. ஜெயந்த் சேது மாதவனின் ஒளிப்பதிவு கதைக்களத்தின் மனநிலையை பார்வையாளருக்கு சிறப்பான முறையில் கடத்துகிறது.
முதல் பாதி திரைக்கதையில் இருந்த நேர்த்தியை இரண்டாம் பாதியிலும் கொடுத்து, தேவையற்ற காட்சித் திணிப்புகளை தவிர்த்திருந்தால் மீண்டும் ஒருமுறை பார்க்கக் கூடிய ஒரு படமாக இருந்திருக்கும் இந்த ‘குட் நைட்’.