தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வைப் பெற வேண்டும் என்பதே எமது இலக்காகும்.
அதற்காக அந்த மக்களின் பிரதிநிதிகளாக எமது பூரணமான பங்களிப்பு தொடரும் என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று திங்கட்கிழமை (15) அதிகாரப்பகிர்வு தொடர்பிலான பேச்சுவார்த்தை ஆரம்பமாகவுள்ள நிலையில், ஏற்கனவே ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு காலஅவகாசத்தினை வழங்கியிருந்த நிலையில் தற்போது முன்னெடுக்கப்படும் பேச்சுவார்த்தையில் எவ்வளவு தூரம் நம்பகத்தன்மையை கொண்டிருக்கின்றீர்கள் என்று வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மக்களின் அபிலாஷைகள் பூர்த்தி செய்யும் வகையில் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் நீண்டகாலமாகவே உறுதியாக இருக்கின்றோம். அதுவே எமது இலக்காகவும் உள்ளது.
அந்த இலக்கை அடைவதற்காக நாம் கிடைத்த அனைத்துச் சந்தர்ப்பங்களையும் பயன்படுத்தி வந்துள்ளோம். எதிர்காலத்திலும் அவ்விதமான செயற்பாட்டையே பின்பற்றுவதற்குள்ளோம்.
அந்த வகையில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரப்பகிர்வு தொடர்பில் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக எம்மை அழைத்துள்ளார். நாம் அந்த அழைப்பினை ஏற்றுக்கொண்டு அதில் பங்கேற்கவுள்ளோம்.