முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக பதவி வகித்த காலத்தில் பித்தளை சந்தி பிரதேசத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த சிவலிங்கம் ஆரூரன் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க மேற்படி சந்தேக நபரை சகல குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்து தீர்ப்பு வழங்கியுள்ளார்.
மேற்படி சந்தேக நபர் 2009 ஆம் ஆண்டு பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
நேற்றைய தினம் அந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதிமன்றத்தினால் சந்தேக நபர் சகல குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப் பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை கொலை செய்வதற்கு சூழ்ச்சி செய்தமை தொடர்பில் 13 குற்றச்சாட்டுகளை முன்வைத்து சட்டமா அதிபரினால் 2013 ஆம் ஆண்டு மேற்படி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பிரதிவாதியான முன்னாள் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் சிசில் டி சில்வா முன்னிலையில் முன் வைக்கப்பட்ட வாக்குமூலத்தை வழக்கின் சாட்சியாக ஏற்றுக் கொள்வதாக சட்ட மாஅதிபர் முன்வைத்த வேண்டுகோள் கடந்த வழக்கு விசாரணையின் போது மேல் நீதிமன்ற நீதிபதியினால் நிராகரிக்கப்பட்டது.
அந்த வகையில் நேற்றைய தினம் சட்ட மாஅதிபர் சார்பில் நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைத்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பிரதிவாதிக்கு எதிராக வேறு சாட்சிகள் கிடையாது என நீதிமன்றத்திற்கு அறிவித்தார். அதனால் தொடர்ந்தும் வழக்கை முன்னெடுத்து செல்வதற்கு சட்ட மாஅதிபர் கருதவில்லை என்பதை மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்திடம் தெரிவித்தார். அதனைக் கவனத்திற் கொண்ட நீதிபதி அனைத்து குற்றச்சாட்டுகளிலும் இருந்து சந்தேக நபரை விடுதலை செய்தார்.
43 வயதுடைய சிவலிங்கம் ஆரூரன் கடந்த 2004 ஆம் ஆண்டு மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றுள்ளதுடன் பேராதனை பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் படிப்பை மேற்கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த காலத்தில் ஏழு தமிழ் மொழி நூல்களையும் ஒரு ஆங்கில மொழி நூலையும் எழுதியுள்ளார். அத்துடன் 2002 ஆம் ஆண்டு சிறுகதைj; தொகுப்பு நூல் விருதுக்கு உரித்தானது.
அத்துடன் 2016 ஆம் ஆண்டு சிறந்த தமிழ் சிறுகதைக்கான அரச சாகித்திய விருதும் அவருக்கு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.