“இந்தியாவில் மத சுதந்திரம் மோசடைந்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிக்கை தவறானது; உள்நோக்கம் கொண்டது” என்று இந்திய வெளியுறவுத் துறை விமர்சித்துள்ளது.
சர்வதேச அளவில் மத சுதந்திரம் குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை கடந்த திங்கள்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், இந்தியாவில் மத சுதந்திரம் எவ்வாறு இருக்கிறது என்பது குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் மத சுதந்திரம் மோசமடைந்து வருவதாகவும், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், பட்டியல் சமூகத்தவர்களுக்கு எதிராக வன்முறைகள் அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மதமாற்றத் தடைச் சட்டத்தை சில மாநிலங்கள் நிறைவேற்றி இருப்பதையும் அது விமர்சித்துள்ளது. அதோடு, காஷ்மீர் பள்ளத்தாக்கில் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் அச்சுறுத்தல் இருந்தபோதிலும், அங்கிருந்து இந்துக்கள் வெளியேற அனுமதிக்கப்படுவதில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளும் பாஜகவினரின் வெறுப்புப் பேச்சுகள் அதிகரித்துள்ளதாக தனது அறிக்கையில் குற்றம்சாட்டியுள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை, முஸ்லிம்கள் கொல்லப்பட வேண்டும் என பாஜக மாநில நிர்வாகி ஹரிபூஷன் தாக்கூர் பச்சோல் கூறியதையும், முஸ்லிம்கள் நடத்தும் உணவகங்களில் இந்துக்களும் கிறிஸ்தவர்களும் உண்ணக் கூடாது என கேரள முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.சி. ஜார்ஜ் கூறியதையும், பசுக்களைக் கொல்வதாக சந்தேகிக்கப்படும் முஸ்லிம்களை இந்துக்கள் கொல்ல வேண்டும் என்று ராஜஸ்தானைச் சேர்ந்த முன்னாள் பாஜக சட்டமன்ற உறுப்பினர் கியான் தேவ் அஹூஜா கூறியதையும் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத் துறையின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு இந்திய வெளியுறவுத் துறை பதில் அளித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி, “தவறான தகவல்களின் அடிப்படையில், உள்நோக்கம் கொண்ட அதிகாரிகள் இத்தகைய அறிக்கையை அளித்துள்ளார்கள். அமெரிக்கா உடனான உறவுக்கு இந்தியா மிகுந்த மதிப்பளிக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்பாக மிகுந்த வெளிப்படைத் தன்மையுடன் இந்தியா, அமெரிக்காவுடன் தகவல்களை பரிமாறிக்கொள்கிறது.
இந்தியாவில் மத சுதந்திரம் தொடர்பான அமெரிக்க வெளியுறவுத் துறையின் முந்தைய அறிக்கையும்கூட இந்தியாவை விமர்சிப்பதாகவே இருந்துள்ளது. உள்நோக்கத்துடனும், ஒரு சார்புடனும் இதுபோன்ற அறிக்கைகளை சில அமெரிக்க அதிகாரிகள் வெளியிடுகின்றனர். இதுபோன்ற அறிக்கைகள் அவர்களின் நம்பகத்தன்மையை மேலும் சிதைப்பதாகவே அமையும்” என்று தெரிவித்துள்ளார்.