2,000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி கடந்த 19-ந் தேதி அறிவித்தது.
அந்த ரூபாய் நோட்டுகளை செப்டம்பர் 30-ந் தேதிக்குள் வங்கிகளில் கொடுத்து அல்லது வங்கி கணக்கில் டெபாசிட் செய்யலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
2,000 ரூபாய் நோட்டுக்கள் பணமதிப்பிழப்பு செய்யப்படவில்லை.
அதேநேரத்தில், அவை திரும்பப் பெறப்படுகின்றன. வங்கிகளில் வரவு வைப்பது என்பது வழக்கமாக வரவு வைப்பது போன்றதே.
இதில் கட்டுப்பாடுகள் கிடையாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
அதேவேளை, 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் பொதுமக்கள் படும் சிரமங்களை அறிவோம். வங்கிகள் போதிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
தேவைப்பட்டால், ஒழுங்கு விதிமுறைகள் வெளியிடப்படும்.
வங்கி கணக்கில் ரூ.50 ஆயிரம் அல்லது அதற்கு மேல் டெபாசிட் செய்தால், வருமானவரி தேவைக்காக ‘பான்’ எண்ணை குறிப்பிடுவது நடைமுறையில் இருக்கிறது.
2,000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி, ரூ.50 ஆயிரம் டெபாசிட் செய்வதற்கும் அது பொருந்தும்.
இந்த பண புழக்கம், நாள்தோறும் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்தது.
இந்நிலையில், 2,000 ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் இன்று முதல் வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நிலையில் நாட்டின் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் தங்கள் கைவசம் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அருகில் உள்ள வங்கிகளில் கொடுத்து மாற்றி வருகின்றனர்.