பூகோள புவிசார் அரசியல் செயற்பாடுகளுக்கு முகங்கொடுக்கும் வகையில் பிராந்தியத்தின் வகிபாகத்தை ஒழுங்குபடுத்துவதற்காக ஆசிய நாடுகள் குரல் எழுப்ப வேண்டியதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
ஜப்பானின் டோக்கியோ நகரில் இன்று (25) ஆரம்பமான ஆசியாவின் எதிர்காலம் தொடர்பான 28வது சர்வதேச மாநாட்டில் (Nikkei Forum) கலந்து கொண்டு சிங்கப்பூர் மற்றும் வியட்நாம் பிரதிப் பிரதமர்கள் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் மத்தியில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை வலியுறுத்தினார்.
ஜப்பானிய நிக்கேய் பத்திரிகை வருடாந்தம் ஏற்பாடு செய்யும் இந்த மாநாடு இன்றும் நாளையும் டோக்கியோவில் நடைபெறவுள்ளது.
ஆசியாவின் பன்முகத்தன்மை, பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் காரணியாகும் என்பதோடு அது கருத்திற் கொள்ளப்பட வேண்டிய உலகளாவிய சக்தியாகும் எனவும் தெரிவித்தார்.
அத்தோடு ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கும் இந்து சமுத்திரத்திற்கும் இடையிலான வேறுபாட்டை தெளிவுபடுத்திய ஜனாதிபதி, ஆசிய-பசுபிக் பிராந்தியமானது ஒரு கட்டமைக்கப்பட்ட பிராந்திய அமைப்பாகும் எனவும் இந்து சமுத்திர வலயமானது வளர்ந்து வரும் பிராந்தியம் எனவும் குறிப்பிட்டார்.
1955 ஆம் ஆண்டு பெண்டுங்கில் நடைபெற்ற ஆசியா-ஆபிரிக்க உச்சிமாநாட்டிலும் இந்து சமுத்திரம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் பிரகடனத்திலும் இந்து சமுத்திர பிராந்தியம் அமைதிப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி இந்தோ-பசிபிக் பிராந்திய தொடர்புகளை மேம்படுத்தும் இலங்கையின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடாவின் “அமைதிக்கான கொள்கைகள் மற்றும் செழுமைக்கான சட்டங்கள்” கொள்கைக்கு தனது முழு ஆதரவையும் தெரிவித்த ஜனாதிபதி, அநேகமான நாடுகள் ஆசியாவின் முன்னேற்றம் மற்றும் அபிவிருத்திக்கு முன்னுரிமை வழங்க தீர்மானித்துள்ளதாகவும் உலக வல்லரசுகளின் போட்டியில் ஆசிய நாடுகள் பக்கம் சாய்வதைத் தவிர்த்துள்ளதாகவும் கூறினார்.
சீனாவுடன் நிலையான உறவைக் கட்டியெழுப்புவதற்கு ஜப்பான் G7 ஒத்துழைப்பு அணுகுமுறையின் முக்கியத்துவத்தை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, “சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக்” பிராந்தியத்திற்கான ஜப்பானின் நோக்கிற்கு ஆதரவளித்ததோடு பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஒத்துழைப்பை வளர்ப்பதற்கு ஆசிய நாடுகளிடையே திறந்த உரையாடலுக்கு அழைப்பு விடுத்தார்.
உலகப் பொருளாதாரத்தில் ஆசியாவின் தனித்துவப் பங்கு மற்றும் பிராந்தியம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.
உலக நிலப்பரப்பில் சுமார் 30வீதத்தையும் 4.75 பில்லியன் மக்கள் தொகையை அல்லது உலக மக்கள்தொகையில் 60% உள்ள ஆசியா, உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற வளர்ந்த பொருளாதாரங்களின் பங்களிப்புடன்,சீனாவின் முன்னேற்றம் மற்றும் இந்தியாவின் வளர்ந்து வரும் உள்நாட்டு கேள்வி என்பன பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
”2050 இல் உலகம்” என்ற பிரைஸ்வோட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ் அறிக்கையை மேற்கோள்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, உலகின் முதல் 10 பொருளாதாரங்களில் ஆசிய நாடுகள் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்வுகூறியதோடு அவற்றில் நான்குநாடுகள் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் என்றும் தெரிவித்தார்.
இது தவிர, வியட்நாமும் பிலிப்பைன்ஸும் முதல் 20 நாடுகளிடையே குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடையும் என்று எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, ஜரோப்பா மற்றும் வட அமெரிக்காவுடன் ஒப்பிடக் கூடிய பொருளாதாரத்தைக் கொண்ட ஆசியா, உலகளாவிய பொருளாதார சக்தியாகவும், மிகவும் செயற்திறனான பிராந்தியமாகவும் மாறியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
ஆசியாவின் பன்முகத்தன்மையை விளக்கிய ஜனாதிபதி, ஆசியாவில் செல்வந்த மற்றும் வறுமையான பொருளாதாரங்கள், பெரிய உப கண்ட வல்லரசுகள் மற்றும் சிறிய அரசுகள் உள்ளடங்குவதாகக் கூறினார். இந்த பன்முகத்தன்மை பிராந்தியத்தின் நிலையை உலகளவில் பலப்படுத்தியுள்ளது. எவ்வாறாயினும், சீனாவின் துரித எழுச்சி மற்றும் சர்வதேச அரங்கில் சீனாவின் பங்கு தொடர்பில் அமெரிக்காவிற்கும் சீனாவுக்கும் இடையில் ஏற்றுக்கொள்ள முடியாத நிலைமை உருவாகியிருப்பதால் கடுமையான சூழ்நிலையும் போட்டித்தன்மையும் ஏற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறினார்.
தற்போதுள்ள சவால்கள் தொடர்பில் கவனம் செலுத்திய ஜனாதிபதி, இரண்டு முக்கிய விடயங்களை வலியுறுத்தினார். முதலாவதாக, ஆசியாவில் ஜனநாயக விழுமியங்கள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான குழப்பம் குறித்து கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி , அரசியல் முறைமைகளிலுள்ள மாற்றம்,மனித உரிமை தொடர்பில் ஒவ்வொருவருக்கும் இருக்கும் புரிதலின் பன்முகத்தன்மை குறித்து தெளிவுபடுத்தினார்.
அடிப்படை அரசியல் விழுமியங்களில் ஒருமித்த கருத்தை எட்டும்போது நாடுகளின் பல்வேறு பின்னணிகளைக் கருத்தில் கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, சட்ட அடிப்படையிலான திட்டத்திற்கான விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்று சுட்டிக்காட்டியதோடு இந்த சட்டவிதிகளை தொடர்ச்சியாக பின்பற்றுமாறு மேலைத்தேய நாடுகளை கோரினார்.
ஜனாதிபதி சுட்டிக்காட்டிய இரண்டாவது பெரிய சவாலான காலநிலை மாற்றம், ஆசியாவிற்கான குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலாக இருப்பதாகும். ஆசிய பிராந்தியத்தில் அதிகரித்து வரும் வெப்பநிலை உயர்வு காரணமாக கடுமையான வானிலை மாற்றங்கள் மற்றும் கடல் மட்ட உயர்வு ஆகியவை ஆசிய நாடுகளின் வாழ்வாதாரம், உணவு பாதுகாப்பு மற்றும் ஏற்றுமதியை பாதிக்கும். மாலைதீவுகள், பங்களாதேஷ், சீனா, இந்தியா, இந்தோனேசியா, மியான்மார், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் உட்பட, பருவநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பதினைந்து நாடுகளில் எட்டு நாடுகள் ஆசியாவில் உள்ளன.
உலகளாவிய காபன் வெளியேற்றத்திற்கு ஆசியா குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறது. ஆசியா உலகின் காபன் உமிழ்வில் சுமார் பாதியை உற்பத்தி செய்கிறது.பாரிய பசுமை இல்ல வாயு உமிழ்வு மேற்கொள்ளும் 5 நாடுகளை கொண்டுள்ளது. காலநிலை மாற்றத்தின் சவால்களைக் குறைப்பதற்கான பாரிஸ் உடன்படிக்கையை இப்பகுதியில் உள்ள பல நாடுகள் ஏற்கனவே கடைப்பிடித்துள்ளன.
அந்த நாடுகள் அனைத்தும் அதற்காக அர்ப்பணிப்புகளைச் செய்துள்ளன. மேலும் பிராந்தியத்தில் உள்ள சில தொழில்மயமான நாடுகள் அங்கீகரிக்கப்பட்ட குறுகிய காலக்கெடுவின் அடிப்படையில் காபன் நடுநிலையை பேணவதற்கு அவகாசம் வழங்க ஆசியாவும் உடன்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி முன்மொழிந்தார்.
போதியளவான நிதி இல்லாமையின் காரணமாக ஆசிய வலயத்தில் காலநிலை அனர்த்தங்கள் உக்கிரமடைந்துள்ளதெனவும் அதற்கான தீர்வுகளை கண்டறிவதற்கு ஆசிய நாடுகள் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டியது அவசியமாவதோடு, எதிர்வரும் மாநாடுகளில் ஆசிய நாடுகளின் ஒருமித்த நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியதோடு பிரதான ஆசிய நாடுகள் ஒருமித்த நிலையாட்டை எட்டும் போதுதான் மாநாட்டின் சாத்தியத்தை கண்டுகொள்ள முடியும் என்றார்.
கொவிட் – 19 தொற்று பரவல் காரணமாக கடன் நிலைத்தன்மை பிரச்சினைக்கு ஆசிய நாடுகள் முகம்கொடுத்து வருகின்ற நிலையில் இலங்கை அதில் முன்னணி வகிக்கின்றது. இடைநிலை வருமானம் ஈட்டும் நாடு என்ற வகையில் கடன் நிலைத்தன்மை தொடர்பிலான கால தாமதத்தை நிவர்த்திக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி எடுத்துரைத்தார். அதற்கான கடன் மறு சீரமைப்பை மாத்திரமே தீர்வாக கொண்டுள்ள இடைநிலை வருமானம் ஈட்டுகின்ற நாடுகள் அதற்கான இணக்கப்பாட்டை பெற்றுக்கொள்ள சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்கின்றன என்றும் தெரிவித்தார்.
அதற்கமைய இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை மட்டத்திலான ஒப்பந்தத்தை 2023 மார்ச் மாதத்தில் மேற்கொண்டிருந்த அதேநேரம் அதன் கீழ் 3 மில்லியன் நீட்டிக்கப்பட்ட கடன் தொகையினை பெறுவதற்கான அனுமதியினை சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபையிடமிருந்து பெற்றுக்கொண்டது என்றும், தற்போது கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ள இலங்கை 2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள் பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக நிறைவு செய்ய எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த வேலைத்திட்டத்திற்கு பலதரப்பு பிரதிநிதித்துவ நிறுவனங்கள், பெரிஸ் சமவாயம், இந்தியா, சீனா தனியார் கடன் வழங்குநர்களும் பங்களிப்புச் செய்கின்றனர் என்பதோடு, இலங்கைக்கு இந்த வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்வதற்கு இடைநிலை வருமானம் ஈட்டும் நாடுகளின் கடனுதவிக்காக பலதரப்பு தொடர்பாடல்களை உறுதி செய்ய சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பயன்படுத்த முடியும் என்றும் குறிப்பிட்டார்.
பொருளாதார நிர்ப்பந்தங்கள் மற்றும் பொருளாதார தொடர்பாடல்களை நிராகரிப்பதன் மூலம் உலக வர்த்தக அமைப்பின் நிலைப்பாடு அல்லது சட்டத்திட்டங்களுக்கமைய பலதரப்பு வர்த்தக முறைமையை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
அதற்கமைய பிரிவினையை எதிர்த்தல் மற்றும் பொருளாதாரத்திற்கு முகம்கொடுக்கும் தன்மை, பாதுகாப்பு தொடர்பிலான உத்திகளுக்காக ஹிரோஷிமா நகரில் நடைபெற்ற ஜீ 7 மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை வரவேற்ற ஜனாதிபதி, அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள்,உலகளாவிய பங்காளர்கள் உடன் கலந்துரையாடலில் ஈடுபடவும் ஒத்துழைப்பான பிரவேசத்தையும் பின்பற்றவும் ஜீ 7 நாடுகள் தீர்மானித்துள்ளது என்பதையும் நினைவுகூர்ந்தார்.
யுக்ரேன் யுத்தம் தொடர்பில் ஆசிய மக்கள் பல்வேறு நிலைப்பாடுகளை கொண்டுள்ள நிலையில் சில தரப்புக்கள் ஐக்கிய நாடுகள் சபையின் கொள்கைகளை நேரடி ஆக்கிரமிப்பாகவும் அத்துமீறலாகவும் கருதுவதாகவும் மற்றும் சிலர் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி அதனை தடுக்க முடியாமல் இருக்கின்ற ஐரோப்பாவின் இயலாமை ஆகியவற்றினால் உருவாகியுள்ள மிகப்பெரிய பிரச்சினையாக இதனை கருதுகின்றனர். எவ்வாறாயினும் இந்த பிரச்சினைகளை நிறைவுக்கு கொண்டுவர வேண்டுமெனில் புரிந்துணர்வுடன் கூடிய கலந்துரையாடல் அவசியம் என்பதையும் எடுத்துக்காட்டினார்.
ஐக்கிய இராச்சியம் மற்றும் சீனாவிற்கு இடையிலான மோதல்கள் தீர்க்கமான ஒன்றாக மாறியுள்ளதாகவும் அண்மைக் காலமாக மேற்படி மோதல் நிலைமைகள் அதிகரித்து வருகின்றமையின் காரணமாக ஒரு புறத்தில் QUAD(ஐக்கிய அமெரிக்கா, இந்தியா, அவுஸ்திரேலியா, ஜப்பான)வலயமொன்றும் மறுபக்கம் இந்து பசுபிக் வலயம் (BRI) மற்றும் ஓரே வழி ஒரே பாதை என்பன உருவாகியுள்ளது.
ஐக்கிய இராச்சியம் – சீனா உள்ளிட்ட நாடுகளுக்கிடையிலான எதிர்மறை செயற்பாடுகளின் போது இரு இராச்சியங்களில் ஒன்றை தெரிவு செய்யுமாறு ஆசிய நாடுகளை பலவந்தப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ASEAN நாடுகள் மற்றும் சீனாவிற்கு இடையிலான பொருளாதார சார்புத் தன்மை தொடர்பில் விளக்கமளித்ததோடு, ஆசியாவை பிளவுபடுத்தும் செயற்பாடுகளுக்கும் எதிர்ப்பை வெளியிட்டார்.
இந்து பசுபிக் வலயங்கள் தொடர்பிலான BRI மற்றும் ASEAN போன்ற எதிர்கால திட்டமிடல்களை உருவாக்கக்கூடிய ஆசிய வலயமொன்று அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.
1955 ஆம் ஆண்டில் பேங்க்டுன் நகரில் இடம்பெற்ற ஆசிய மற்றும் ஆபிரிக்க மாநாட்டின் தீர்மானத்தின் பிரகாரம் இந்து சமுத்திர வலயம் அமைதி வலயமாக ஐ.நாவினால் பெயரிடப்பட்டது. 2017 ஆம் ஆண்டில் இடம்பெற்ற (IORA) தலைவர்கள் மாநாட்டில் மேற்படி முன்மொழிவுகள் மீண்டும் முன்வைக்கப்பட்டிருந்ததோடு, அதன் பிரகாரம் இலங்கை 2018 ஆம் ஆண்டில் நடத்திய “இந்து சமுத்திரத்தில் – எமது எதிர்காலத்தை கூறல்” என்ற மாநாட்டில் கடல்வழிப் பிரயாணங்கள், விமானச் செயற்பாடுகள் மற்றும் கடலுக்கு கீழான கேபிள் திட்டம் ஆகியவற்றின் அவசியத்தை எடுத்துக்காட்டப்பட்டது.
இந்து – பசுபிக் வலயத்தின் பல்துறைசார் தொடர்பாடல்களை வலுப்படுத்த இலங்கை அர்பணிப்புடன் செயற்படும் என்பதோடு, பிரதமர் புமீயோ கிஷிடாவின் அமைத்திக்கான கொள்கைகள் மற்றும் சுபீட்சத்திற்கான சட்டதிட்டங்கள் எனும் கொள்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் தெரிவித்தார். சுபீட்சத்திற்கான சட்டத்திட்டங்களுக்கு அமைய இலங்கையின் பொருளாதார இலகுபடுத்தல் செயற்பாடுகளை சாத்தியமாக்கிக் கொள்ளும் நோக்கில் RCEP உறுப்புரிமையை பெற்றுக்கொள்ள கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
சீனாவுடனான நிலையானதும் வலுவானதுமான நல்லுறவை கட்டியெழுப்புவதற்குகாக G7s பரிந்துரையினை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த ஜனாதிபதி, ஜப்பானின் ஒத்துழைப்புக்கான பிரவேசத்திற்கு ஆதரவளிக்க தயாராக இருக்கின்ற அதேநேரம் அதற்கு அவசியமாக சூழலை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
ஜப்பானின் ஒத்தழைப்புக்கான பிரவேசத்திற்கு ஆதரவளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சீனா, இந்தியா, ஜப்பான் போன்ற ஆசியான் நாடுகளுக்கு திறந்த கலந்துரையாடலுக்கான அழைப்பினை விடுத்த அதேநேரம் சுபீட்சமான ஆசிய வலயத்தை உருவாக்குவதற்கு அது முக்கிய காரணமாக அமையுமென்றும் சுட்டிக்காட்டினார்.