யாழ்ப்பாணத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புக்கள் தடைசெய்யப்பட்டு அதில் பங்குபற்றும் மாணவர்களை ஏனைய நடவடிக்கைகளில் பங்குபற்ற வைக்கப்படும் என யாழ்.மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரம் தெரிவித்துள்ளார்.
யாழ் இந்து வித்தியாலயத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட செயலாளர் மேலும் தெரிவிக்கையில், சிறுவர்களை கையடக்கத் தொலைபேசிக்கு அடிமையாவதை எப்படியாவது தடுத்து அவர்களை யாழ் முழுவதிலும் கலை நடவடிக்கைகளில் ஈடுபடுத்த வேண்டிய தேவை உள்ளது.
யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் பல்வேறு துஷ்பிரயோகங்களுக்கு பாடசாலை மாணவர்களும் தனியார் வகுப்பு மாணவர்களும் பங்களிப்பதாகவும், அவர்களைப் பாதிக்கும் முக்கிய காரணியாக கையடக்கத் தொலைபேசிகள் இருப்பதாகவும் யாழ்.மாவட்டச் செயலாளர் தெரிவித்தார். இந்த அவலத்தில் இருந்து மாணவர்களை காப்பாற்ற கல்வித்துறையுடன் தொடர்புடைய அனைத்து அதிகாரிகளும் நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் அனைவரும் இணைந்து கொள்ள வேண்டும்.
இதன்படி, முதற்கட்டமாக யாழ்ப்பாணம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புக்கள் தடை செய்யப்படுவதாகவும், யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் துறை ஆசிரியர்களுடன் விரைவில் கலந்துரையாடல் நடத்தப்படும் எனவும் செயலாளர் தெரிவித்தார்.
உத்தரவை மீறும் ஆசிரியர்களுக்கு அபராதம் விதிக்கும் அமைப்பு தயாரிக்கப்படும் என மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.