தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார்.
நடிகையர் திலகம் படத்தில் மறைந்த நடிகை சாவித்திரி கதாபாத்திரத்தில் நடித்த பிறகு கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வருகின்றன.
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த வருடம் மட்டும் 4 படங்கள் வந்தன. இவற்றில் ஒன்றான சாணிகாகிதம் படத்தில் ரவுடிகளுடன் மோதி அழிக்கும் அதிரடி கதாபாத்திரம் அவருக்கு அமைந்தது.
தற்போது தமிழில் மாமன்னன், சைரன், ரகுதாத்தா, ரிவால்வர் ரீட்டா, தெலுங்கில் போலோ சங்கர் ஆகிய 5 படங்கள் கைவசம் உள்ளன. மாமன்னன் படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக வருகிறார். இந்த படத்தில் கம்யூனிஸ்டு கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.
கீர்த்தி சுரேஷ் கூறும்போது, “மாமன்னன் படத்தில் நான் கம்யூனிஸ்ட்டாக வருகிறேன். எனது கதாபாத்திரம் அனைவருக்கும் பிடிக்கும்” என்றார். மாரி செல்வராஜ் இயக்கி உள்ள மாமன்னன் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.