உயரும் நடிகைகள் சம்பளம்

சினிமாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நடிகர் களுக்கும், நடிகைகளுக்கும் சம்பள விஷயத்தில் பெரிய வித்தியாசம் இருந்ததை பார்க்க முடிந்தது. கதாநாயகர்கள் வாங்கும் சம்பளத்தில் கால் பங்கை மட்டுமே நடிகை களுக்கு கொடுத்து வந்தனர்.
ஆனால் சமீப காலமாக சம்பள முரண்பாட்டை ஒழித்து நடிகர்களுக்கு இணையாக தங்களுக்கும் சம்பளம் வேண்டும் என்று நடிகைகள் ஓங்கி குரல் கொடுத்து வருகிறார்கள்.
அவர்கள் சம்பளத்தை உயர்த்தி கேட்க காரணமும் இருந்தது. முன்பெல்லாம் கதாநாயகிகளை காதல் செய்யவும், மரத்தை சுற்றி வந்து டூயட் பாடவும் மட்டுமே பயன்படுத்திய நிலையில் இப்போது அவர்களும் தனி மார்க்கெட் அந்தஸ்தை பெற்றுள்ளனர்.
தங்களை முதன்மைப்படுத்தும், கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து அந்த படங்களை வசூல் சாதனைகளையும் செய்ய வைத்து, கதாநாயகர்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்று நிரூபித்து வருகிறார்கள்.
கதாநாயகிகளை முதன்மைப்படுத்தி வந்த பல படங்கள் பெரிய நடிகர்கள் படங்களையும் மிஞ்சி வசூல் சாதனைகள் நிகழ்த்தி திரையுலகினரை ஆச்சரியப்படுத்தி உள்ளன. இதனால் கதாநாயகிகள் மார்க்கெட் மளமளவென உயர்வதோடு சம்பளமும் கணிசமாக ஏறி இருக்கிறது.
இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா முதல் தடவையாக கதாநாயகனுக்கு இணையாக சம்பளம் தனக்கு கிடைத்துள்ளது என்றார். நடிகை கங்கனா ரணாவத்தும் ஹீரோவுக்கு இணையாக தானும் சம்பளம் பெறுவதாக தெரிவித்தார்.
சம்பளத்தை உயர்த்திக் கேட்க சக நடிகைகளுக்கு இது தூண்டுதலாக அமைந்து இருக்கிறது. தமிழ் நடிகைகளில் நயன்தாரா ஏற்கனவே அதிக சம்பளம் பெற்று வந்த நிலையில் கதாநாயகியை முதன்மைப்படுத்தும் படங்களில் நடித்த பிறகு இன்னும் சம்பளத்தை உயர்த்தி இருக்கிறார்.
ஒரு படத்துக்கு ரூ.6 முதல் ரூ.7 கோடி வாங்கி வந்த அவர் இப்போது ரூ.10 கோடி கேட்கிறார் என்கின்றனர் `ஜவான்’ இந்தி படத்திலும், `இறைவன்’, `டெஸ்ட்’ உள்ளிட்ட 4 தமிழ் படங்களிலும் நயன்தாரா தற்போது நடித்து வருகிறார்.
சமந்தாவுக்கு தமிழ், தெலுங்கில் நல்ல மார்க்கெட் உள்ளது. இந்தி, ஹாலிவுட் படங்களிலும் நடிக்கிறார்.
இதுவரை ரூ.3 கோடி, ரூ.4 கோடி என்று வாங்கி வந்த சமந்தா இப்போது ரூ.7 கோடி சம்பளம் கேட்கிறாராம். 20 வருடங்களாக சினிமாவில் கொடிகட்டி பறக்கும் திரிஷா `பொன்னியின் செல்வன்’ படத்துக்கு முன்பு வரை ரூ.2 கோடி வாங்கி வந்ததாகவும், இப்போது ஒரு படத்துக்கு ரூ.3 கோடி முதல் ரூ.4 கோடி கேட்பதாகவும் தகவல். இதுவரை படங்களின் பட்ஜெட்டுக்கு ஏற்ற மாதிரி ரூ.2 கோடி, ரூ.3 கோடி என்று சம்பளம் வாங்கிய காஜல் அகர்வால் இப்போது ரூ.4 கோடி கேட்கிறார். ரூ.2 கோடி வாங்கி வந்த ரகுல்பிரீத் சிங் தற்போது ரூ.3 கோடி கேட்கிறார்.
இதுபோல் இதுவரை ரூ.2 கோடி சம்பளம் வாங்கிய கீர்த்தி சுரேஷ் மேலும் ரூ.1 கோடி சேர்த்து கேட்கிறாராம். ஐஸ்வர்யா ராஜேஷ் ரூ.2 கோடிக்கு மேல் கேட்பதாக தகவல். தமன்னா சம்பளத்தை ரூ.3 கோடியில் இருந்து ரூ.4 கோடியாக உயர்த்தி உள்ளார்.
அனுஷ்கா ரூ.5 கோடி கேட்கிறார். ராஷ்மிகா மந்தனா ரூ.3 கோடி முதல் ரூ.4 கோடி வரை வாங்கி வந்தார். புஷ்பா படத்துக்கு பிறகு ரூ.6 கோடி கேட்கிறார். சாய்பல்லவி சம்பளத்தை ரூ.1 கோடியில் இருந்து ரூ.2 கோடியாக உயர்த்தி உள்ளார்.

Related posts