அன்று, இலங்கைப் பல்கலைக்கழகங்கள், ஆசியப் பல்கலைக்கழகங்களின் பட்டியலில் முதன்மையான இடத்தில் இருந்ததாகவும், அந்தத் தரம் மற்றும் நற்பெயரை இந்நாட்டின் பல்கலைக்கழக கட்டமைப்பில் மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அதன் ஊடாக வெளிநாட்டு மாணவர்களையும் இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கு ஈர்க்க முடியும் எனவும் அது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த (09) பிற்பகல் இடம்பெற்ற “CVCD Excellence Awards” நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த நாட்டில் கல்வி முறையில் உள்ள பிரச்சினைகளை விரைவில் தீர்க்க வேண்டியதன் அவசியத்தை விளக்கிய ஜனாதிபதி, அனைவரும் சரியான வயதில் கல்வியை நிறைவுசெய்து முன்னேறிச் செல்லக்கூடிய சூழலை உருவாக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
நான் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய காலம் இப்போது நினைவுக்கு வருகின்றது. அப்போது, சென்னையில் நடந்த லண்டன் உயர்தரப் பரீட்சையிலும் நான் சித்தி பெற வேண்டும் என்று என் தந்தை வலியுறுத்தினார். அதனால் நான் சென்னைக்குச் சென்று லண்டன் உயர்தரப் பரீட்சையையும் எழுதினேன்.
ஆனால், அதற்குள் நான் இலங்கையில் தோற்றிய உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளும் வெளியாகி பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்றிருந்தேன். எனவே அந்த நாட்களில் இது ஒரு எளிய செயல்முறையாக இருந்தது. இப்போது போல் புள்ளிவழங்கும் முறை இருக்கவில்லை. நான்கு பாடங்களில் சித்தி பெற்ற அனைவரும் பல்கலைக்கழகத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மூன்று பாடங்களில் சித்தி பெற்றவர்களும் அனுமதிக்கப்பட்டனர்.
அதேநேரம், நான் லண்டன் உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளையும் பெற்றிருந்தேன். அதனால் இலங்கையில் தங்குவதா அல்லது ஐக்கிய இராச்சியம் செல்வதா என்பதை நான் தீர்மானிக்க வேண்டியிருந்தது. ஆனால் நான் இலங்கையில் இருக்க முடிவு செய்தேன். எனது தாத்தாவுக்கு இருந்த தொடர்புகளின் அடிப்படையில், நான் பேராதனை பல்கலைக்கழகத்திற்குச் செல்ல வேண்டும் என்று எனது அம்மா வற்புறுத்தினார், ஆனால் சட்டக் கல்வியைத் தொடர கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு செல்ல வேண்டும் என்பதே எனது விருப்பமாக இருந்தது.
பேராசிரியர் லீயின் மரணத்திற்குப் பிறகு, அப்போதைய பீடாதிபதி மற்றும் சட்டத்துறைப் பேராசிரியராக இருந்த நடராஜா, ரோமன் டச்சு சட்டத்தில் அதிக நிபுணத்துவம் பெற்றிருந்தார். மேலும் எங்களுக்கு பல விரிவுரையாளர்கள் இருந்தனர். இளம் உதவி விரிவுரையாளராக ஜி.எல். பீரிஸ் அவர்களும் பணியாற்றினார்.
இலங்கையில் எனது பல்கலைக்கழகக் கல்வியை வெற்றிகரமாக நிறைவு செய்தேன். இலங்கையில் எனது கல்வி குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
ஆனால், இன்றைய இளைஞர்களிடம் இலங்கையில் இருக்க விரும்புகிறீர்களா என்று கேளுங்கள். அவர்களில் பெரும்பாலானவற்றின் பதில் இல்லை என்பதே ஆகும். இலங்கைப் பல்கலைக் கழகத்தில் கல்வி கற்கத் தகுதி பெற்றாலும் அவர்கள் இலங்கையில் தங்க விரும்புவதில்லை.
அந்த நாட்களில், இலங்கையில் உள்ள பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகவில்லை என்றால் எங்கள் இரண்டாவது மாற்றுவழியாக ஐக்கிய இராச்சியத்தைத் தேர்ந்தெடுப்போம். ஆனால் இப்போது அவ்வாறில்லை. இன்று, பல்கலைக்கழகக் கட்டமைப்பில் இது ஒரு பிரச்சினையாக மாறியுள்ளது. அது நாட்டின் எதிர்காலத்தை பாதிக்கும் என்றே கூற வேண்டும்.
எனவே, பல்கலைக்கழகக் கல்வியின் பங்கு என்ன என்பது தொடர்பில் நாம் முதலில் கவனம் செலுத்த வேண்டும்.
நம் நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 1,70,000 மாணவர்கள் உயர்கல்விக்குத் தகுதி பெறுகின்றனர். அவர்களில் சுமார் 40,000 பேர் பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெறுகின்றனர். மேலும் 30,000 முதல் 40,000 பேர் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு செல்கிறார்கள். ஆனால் பல்கலைக்கழகங்களுக்குத் தகுதிபெறும் 40,000 பேருக்கு மேலதிகமாக மேலும் 25,000-30,000 பேரை இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்குவதற்கான பொறிமுறை ஒன்றை ஏற்படுத்த வேண்டும்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் இயங்கும் பல்கலைக்கழகக் கட்டமைப்பு ஒன்று எம்மிடம் உள்ளது. அதேவேளை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு கீழ் உள்வாங்கப்படாத பல்கலைக்கழகங்களும் உள்ளன. மேலும், இலாபமீட்டும் மற்றும் இலாப நோக்கற்ற பல்கலைக்கழகக் கட்டமைப்பும் உள்ளது. எனவே, இந்த மூன்று முறைகளையும் நடைமுறைப்படுத்துவதா அல்லது ஒரு முறையை உருவாக்கி பல்கலைக்கழகக் கட்டமைப்பை மீட்டெடுப்பதா என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
அதேபோன்று, உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு அரசாங்கம் உதவித்தொகை வழங்குகிறது. மேலும் பல மாணவர்கள் வெளியே சென்று பணம் செலுத்தி உயர்கல்வி பெறுகின்றனர். மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தில் அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ள சரத்தை நாம் பாதுகாக்க வேண்டும்.
இது வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு முறைகளில் செயல்படுத்தப்படுகிறது. சில நாடுகள் மாணவர்களுக்கு கடன் வழங்குகின்றன. இன்னும் சில நாடுகள் பொருளாதார நெருக்கடியில் உள்ள மாணவர்களுக்கு உதவிகளை வழங்குகின்றன. நாம் இது குறித்து ஆராய வேண்டும். அதிகபட்ச எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு கல்வியை வழங்கக்கூடிய வழிமுறைகள் தொடர்பில் நாம் கவனம் செலுத்த வேண்டும். எம்மால் இந்தப் பிரச்சினைகளைத் தவிர்க்க முடியாது. ஏனெனில், ஒரு நாடாக முன்னேறிச் செல்லும்போது, பொறியாளர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள் உள்ளிட்ட ஏராளமான நிபுணர்கள் நமக்குத் தேவைப்படுகின்றனர்.
மேலும், கல்வியின் தரநிலை மற்றும் தரம் குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டும். அன்று, ஆசியப் பல்கலைக் கழகங்களின் பட்டியலில் நம் நாட்டுப் பல்கலைக் கழகங்கள் முதன்மை இடத்தில் இருந்தன. ஆனால் இன்று அந்த நிலை மாறிவிட்டது.
எமது பல்கலைக்கழகங்களின் செயற்பாடுகளை மீண்டும் எவ்வாறு மேம்படுத்துவது என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். நமது பல்கலைகழகங்களின் தரம் மற்றும் நற்பெயரை உலகிற்கு எவ்வாறு மீண்டும் உறுதிப்படுத்துவது என்பதை நாம் கண்டறிய வேண்டும். இதன் மூலம் உலகின் பிற நாடுகளைச் சேர்ந்த மாணவர்களை நமது பல்கலைக்கழகங்களுக்கு ஈர்க்க முடியும். நமது நாட்டின் பொருளாதாரத்திற்கு இது நல்லதொரு நிலை என்றே கூற வேண்டும்.
உபவேந்தர்களைத் தாக்கி, கல்விக்கு இடையூறுகளை ஏற்படுத்துவதன் மூலம் தரமான பல்கலைக்கழகக் கட்டமைப்பைப் முன்னெடுக்க முடியாது. இந்தப் பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்று நான் நம்புகிறேன்.
மேலும், நமது கல்வி முறையில் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. மாணவர்கள் சுமார் 20 வயது வரை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதில்லை. பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறும் போது சுமார் 24 வயது ஆகின்றது. நான் பட்டம் பெறும்போது எனக்கு 21 வயது. 23 வயதில் உயர் நீதிமன்றத்தின் வழக்கறிஞரானேன். மாணவர்களுக்கு அந்த வாய்ப்பு இப்போது இல்லை என்று நான் நினைக்கிறேன். உங்கள் வாழ்க்கையின் சிறப்பான காலம் தான் வீணாகிறது. பின்னர் நீங்கள் தொழிலொன்றைத் தேடுவதில் சிக்கலை எதிர்கொள்கிறீர்கள். இந்தப் பிரச்சினைகளை நாம் விரைவாகத் தீர்க்க வேண்டும்.
இன்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் இயங்காத பல்கலைக்கழகங்கள் தொழில் சந்தையை இலக்கு வைத்து செயற்படுவதால் பெருமளவிலான மாணவர்கள் அதன் பக்கம் திரும்பியுள்ளனர். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமன்றி வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கும் இது பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. எனவே, இது தொடர்பில் ஏனையவர்கள் தீர்வுகளை வழங்குவார்கள் என்று காத்திருப்பதற்குப் பதிலாக, நாம், நமக்கு ஏற்ற தீர்வுகளைக் காண வேண்டும்.
அடுத்த பிரச்சினை தான் சம்பளம். இதில் உங்களின் முக்கிய பிரச்சினை தற்போதைய வரிவிதிப்பாகும். பல்கலைக்கழக கல்வி சார் ஊழியர்களுக்கு எவ்வாறு சம்பளம் வழங்குவது என்பது மற்றொரு பிரச்சினை ஆகும். மேற்கத்தேய பல்கலைக்கழகங்கள், இத்தகைய சந்தர்ப்பங்களில் சந்தைப் பெறுமதிக்கு ஏற்ப சம்பளம் வழங்குகின்றன. நாமும் அந்த முறையைப் பின்பற்றுவோமா, அல்லது தற்போதைய முறையையே பின்பற்றுவோமா என்பது தொடர்பில் நாம் அவதானம் செலுத்த வேண்டும். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் இயங்காத பல்கலைக்கழகங்களைக் கருத்தில் கொண்டால், அவை தனிநபர் மதிப்பின் படி கொடுப்பனவுகளை செலுத்துகின்றன என்பதில் சந்தேகமில்லை.
மேலும், இன்று செய்யப்படும் ஆராய்ச்சியின் தரத்தைப் போன்றே சில ஆராய்ச்சிகள் குறித்தும் குற்றச்சாட்டுகள் உள்ளன. இவை அனைத்தையும் நாம் தீர்த்து வைக்க வேண்டும். நமது நாட்டில் போதுமான பட்டப்பின் படிப்புக் கற்கை நிறுவனங்கள் இருக்கிறதா என்பது குறித்து, CVCD குழுத் தலைவர் மற்றும் உபவேந்தர்களுடன் நான் கலந்துரையாடினேன். அதேபோன்று, நாம் என்ன பட்டப்பின் படிப்புக் கற்கைகளை மேற்கொண்டுள்ளோம்?
இலங்கைப் பல்கலைக்கழகம் “மனமே” மற்றும் “சிங்கபாகு” ஆகிய இரண்டு நாடகங்களைத் தயாரித்து இலங்கையின் கலாசாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியது. தனி ஒரு பல்கலைக்கழகமாக அந்த மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். அவர்கள் இலங்கை வரலாற்றை 04 தொகுதிகளாகத் தயாரித்துள்ளனர். அதில் சில பகுதிகள் காலாவதியானதாக இருக்கலாம். ஆனால் அவர்கள் என்ன செய்தார்கள் என்பதில் கவனம் செலுத்தும் போது, மற்றப் பல்கலைக்கழகங்கள் அதை நெருங்கவே இல்லை. நாம் இந்த விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.
இப்போது அனைவருக்கும் சமூக ஊடகங்கள் மற்றும் இணைய வசதிகள் உள்ளன. AI தொழில்நுட்பம் என்ற செயற்கை நுண்ணறிவு உள்ளது. “GBT Chat” உள்ளது. இவை பரீட்சைகளுக்காகவும் பயன்படுத்தப்படுவதோடு, மேலும் சில பட்டப்பின் படிப்பு ஆராய்ச்சிக்கும் பயன்படுத்தப்படுகின்றன. எனவே காலாவதியான முறைகளை கடைபிடிக்கிறோமா அல்லது தொழில்நுட்பத்துடன் முன்னேறுகிறோமா என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
2050 ஆம் ஆண்டாகும்போது, தெற்காசியாவின் சனத்தொகை குறித்து உற்றுநோக்கினால் அது மிக வேகமாக அதிகரிக்கின்றது. இந்தியாவின் சனத்தொகை சிலநேரம் 1.7 பில்லியன் வரை அதிகரிக்கலாம். மேலும், வறுமை நிலை குறைந்து வருமானம் உயர்கின்றது. பங்களாதேஷ் பாகிஸ்தான், மியான்மார் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளிலும் இது நிகழலாம். இவ்வாறு அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, தேவையான பல்கலைக் கழகங்களை உருவாக்க முடியாது. இந்தியாவுக்கு மாத்திரம் இவர்கள் அனைவருக்கும் கல்வியை வழங்கவும் முடியாது.
நாம் இது குறித்து அவதானத்துடன் இருக்க வேண்டும். அப்படியானால், நம் நாட்டில் போதுமான எண்ணிக்கையில் பல்கலைக்கழகங்கள் இருக்க வேண்டும். இப்போது அவர்கள் எமது தேவைகளைப் பூர்த்தி செய்வதைப் போன்று, அவர்களுடைய தேவைகளை நாம் பூர்த்தி செய்ய வேண்டிய காலம் வரலாம் என்று நான் நம்புகிறேன்.
எனவே தற்போதுள்ள பல்கலைக்கழகக் கட்டமைப்பை அப்படியே தொடர்வதா? அல்லது தேவையான மாற்றங்கள் செய்வதா? என்பதை நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. இந்நாட்டின் முதல் வதிவிடப் பல்கலைக்கழகமான பேராதனைப் பல்கலைக்கழகம், ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் கட்டமைப்பைக் கொண்டுள்ளது. ஆனால், தற்போதுள்ள நவீன பல்கலைக்கழகங்களில் அத்தகைய அமைப்பு காணப்படவில்லை. நாம் இந்த அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டும். இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண கல்வி தொடர்பான அமைச்சரவைக் குழுவொன்றையும் அமைத்துள்ளோம்.
இன்று விருதுகளைப் பெற்ற உங்கள் அனைவரையும் நான் வாழ்த்துவதோடு, இந்த ஆராய்ச்சிகளின் மூலம் இந்நாட்டின் பல்கலைக்கழகங்களின் நற்பெயரை உயர்த்துவதில் நீங்கள் வெற்றி பெற்றுள்ளீர்கள் என்பதைக் கூற வேண்டும்.
மேலும், எதிர்காலத்தில் இந்த ஆய்வு நடவடிக்கைகளுக்கு அதிகளவிலான ஒதுக்கீடுகளை வழங்க எதிர்பார்த்துள்ளதோடு, அதற்காக வருடாந்தம் சுமார் ஒரு பில்லியன் ரூபா நிதியை வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதையும் குறிப்பிட வேண்டும்.