இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இப்போது நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
விஜய்யின் ‘லியோ’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள அவர், தங்கர்பச்சானின் ‘கருமேகங்கள் கலைகின்றன’, ‘விடுதலை 2’ உட்பட சில படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அடுத்த வருடம் மலையாளப் படத்தை இயக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
மலையாளத்தில் மம்மூட்டியின் ‘பஜூக்கா’ (Bazooka) என்ற படத்தில் நடித்திருக்கிறேன்.
மம்மூட்டியிடம் கற்றுக்கொள்ளலாம் என்பதற்காகவே இந்தப் படத்தை ஒப்புக்கொண்டேன். அவருடன் நடித்த 10 நாட்களும் சிறந்த அனுபவம்.
மலையாளத்தில் ஒரு நீண்ட வசனத்தை நான் பேசியபோது ஆச்சரியப்பட்டார்.
பல வருடங்களாக கேமராவை பார்த்துக்கொண்டிருப்பதால், போரடிக்கிறதா என்று கேட்டேன்.
ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கதாபாத்திரமாக இருப்பதால் சலிக்கவில்லை என்றார்.
மலையாளப் படங்களிலும் நடிகர்களின் நடிப்பிலும் தீவிரத் தன்மை இருக்கிறது.
பெரிய நடிகர்கள் கூட சாதாரண கேரக்டர்களில் நடிக்கிறார்கள்.
தமிழில் பல படங்கள், ஹீரோக்களுக்காகவே எழுதப்படுகிறது. அவர்களின் இமேஜை உயர்த்தும் வகையில் கதைப் பின்னப்படுகிறது.
தமிழில் தொழில்நுட்படங்கள் வளர்ந்திருக்கின்றன.
ஆனால்,மலையாள சினிமா அதைப் பற்றிக் கவலைப்படவில்லை.
அடுத்து, ‘துருவ நட்சத்திரம்’ படத்தை வெளியிடும் வேலைகளில் இருக்கிறேன். இதனால் நடிக்க வந்த பல வாய்ப்புகளை மறுத்துவிட்டேன்.
அடுத்த வருடம் மலையாளத்தில் படம் இயக்குவேன். அதற்காக பேசி வருகிறேன். மம்மூட்டி, ஃபஹக் பாசில் ஆகியோருடன் பணியாற்ற விரும்புகிறேன்.
இவ்வாறு கவுதம் வாசுதேவ் மேனன் கூறியுள்ளார்.