ராவணனாக நடிக்கவைக்க வேறு ஆளே கிடைக்கவில்லையா? என்று ‘சக்திமான்’ தொடரில் நடித்த முகேஷ் கண்ணா கேள்வி எழுப்பியுள்ளார்.
‘ஆதிபுருஷ்’ திரைப்படம் குறித்து முகேஷ் கண்ணா வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் கூறியிருப்பதாவது: ராவணன் பயங்கரமான ஆளாக இருக்கலாம், ஆனால் அவர் ஒரு பண்டிட். ராவணனை ஒருவரால் எப்படி இப்படி கற்பனை செய்து வடிவமைக்க முடியும் என்று அதிர்ச்சியாக உள்ளது.
படம் அறிவிக்கப்பட்டபோது, அந்த கதாபாத்திரத்தை நகைச்சுவையாக மாற்றுவேன் என்று சைஃப் கூறியது எனக்கு நினைவிருக்கிறது. எங்கள் காவியத்தின் கதாபாத்திரங்களை மாற்ற நீ யார் என்று நினைத்தேன். உண்மை என்னவென்றால், ராவணனை நகைச்சுவையாக காட்ட தயாரிப்பாளர்கள் முயன்றுள்ளனர்.
சைஃப் அலிகானை விட சிறந்த நடிகரை ஓம் ராவத்தால் கண்டுபிடிக்க முடியவில்லையா? இது ராவணனைப் போல் இல்லை. ஒரு மலிவான கடத்தல்காரனைப் போல இருக்கிறது.
இவ்வாறு முகேஷ் கண்ணா அந்த வீடியோவில் பேசியுள்ளார்.
ராமாயணக் கதையின் ஒரு பகுதியை மையமாக வைத்து ஓம் ராவத் இயக்கியுள்ள திரைப்படம் ‘ஆதிபுருஷ்’ . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சைப் அலி கான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஒரே நேரத்தில் 5 மொழிகளில் கடந்த ஜூன் 16 அன்று திரையரங்குகளில் வெளியானது.
எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றுவரும் இப்படத்தின் கிராபிக்ஸ்கள் மோசமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.மேலும் படத்தில் இடம்பெற்ற சில வசனங்கள் ராமாயணத்தை இழிவுபடுத்துவதாகக் கூறி பலரும் விமர்சித்து வருகின்றனர்.
எதிர்மறை விமர்சனங்கள், சர்ச்சைகளைத் தாண்டி படம் வெளியாகி நான்கு நாட்களில் உலகம் முழுவதும் ரூ.375 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.