தேவர் மகன்’ பட விவகாரத்தில் அரசியல் ஆதாயத்திற்காகவும், சினிமா வியாபாரத்திற்காகவும் நடிகர் கமல்ஹாசன் வாயை மூடிக்கொண்டு இருந்துவிட்டதாக இயக்குநர் பேரரசு விமர்சித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ‘மாமன்னன்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்வு தனியார் தொலைகாட்சி ஒன்றில் ஒளிபரப்பானது. இதனைத் தொடர்ந்து விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் கமல்ஹாசன் முன்னிலையில் ‘தேவர் மகன்’ திரைப்படம் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் பேசிய கருத்துகள் இணைய வெளியில் விவாதத்தை கிளப்பின. கமல் ரசிகர்கள் பலரும் மாரி செல்வராஜின் பேச்சுக்கு எதிர்வினையாற்றி வந்தனர்.
இந்த நிலையில் இந்த விவகாரத்தில் அரசியல் ஆதாயத்திற்காகவும், சினிமா வியாபாரத்திற்காகவும் நடிகர் கமல்ஹாசன் வாயை மூடிக்கொண்டு இருந்துவிட்டதாக இயக்குநர் பேரரசு விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியுள்ளதாவது: ‘மாமன்னன்’ பாடல் வெளியீட்டு விழாவில் வாழ்த்த வந்த கமல்ஹாசனை இயக்குநர் மாரி செல்வராஜ் வசை பாடிவிட்டார் என்று இங்கே நிறைய கோப வீச்சுகள் பரவி வருகின்றன.
ஆனால் கமல்ஹாசனுக்கு இதில் எந்தவித வருத்தமும் இல்லை, கோபமும் இல்லை. அவருடைய உரையில் அதற்கான பதில் எதுவும் இல்லை. மேலும், மாரி செல்வாராஜை உயர்த்திப் பிடித்தே பேசினார் அது அவருடைய பக்குவமாக இருக்கலாம். அந்த இயக்குனர் கமல்ஹாசன் என்ற நடிகரை குறை சொல்லவில்லை, ‘தேவர் மகன்’ என்ற படைப்பை குறை கூறி இருந்தார்.
தான் நடித்த ஒரு படைப்பை குறிப்பாக தமிழகமே கொண்டாடிய ஒரு படைப்பை ஒருவர் குறை சொல்லும்போது அதற்கு பதில் அளிக்க வேண்டியது கடமை. கமல்ஹாசனை குறை கூறும் போது அதற்கு எந்தவித எதிர்வினையும் காட்டாதிருப்பது அவர் இஷ்டம். ஆனால் தான் நடித்த சிறப்பான படைப்பை ஒருவர் பொது மேடையில் குறை கூறும்போது அதற்கான விளக்கத்தை அளித்திருக்க வேண்டியது ஒரு நல்ல கலைஞனின் கடமை. அந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன் ஒரு கலைஞனாக அல்ல, ஒரு அரசியல்வாதியாக இருந்து விட்டார். அரசியல் ஆதாயத்திற்காகவும், சினிமா வியாபாரத்திற்காகவும் தன் வாயை மூடிக்கொண்டு இருந்துவிட்டார்.
நாட்டு மக்களில் பலர் ஒரு நல்ல படைப்புக்காக பொங்கிஎழும்போது அந்தப் படைப்பால் ஆதாயம் பெற்ற ஒருவர் அமைதியாக இருந்தது வியப்பாக இருக்கிறது. மேலும் தேவர்மகனை குறை கூறும்போது அவருக்கு கோபம் வரவாய்ப்பு இல்லை. ஏனென்றால் அவருக்கு அது ஒரு சினிமா. ஆனால் ரசிகர்களுக்கு அது ஒரு சிறந்த படைப்பு. அது ஒரு சமூகத்தின் பதிவு. எனவே மக்களே! கமலுக்கு அவமானம் ஏற்பட்டு விட்டதே என்று யாரும் கவலைப்படாதீர்கள். ஒரு படைப்பு, புரிதல் இல்லாதவரின் விமர்சனத்திற்கு உள்ளாகி விட்டதே என்று மட்டும் கவலைப்படுவோம்! அதை புறம் தள்ளுவோம். இவ்வாறு பேரரசு கூறியுள்ளார்.