பாலிவுட்டில் பிரபல நடிகரான சல்மான் கான் மும்பை பாந்திரா பகுதியில் வசித்து வருகிறார்.
அவருக்கு, கடந்த மார்ச் மாதத்தில் கொலை மிரட்டல் விடுத்து இ-மெயில் ஒன்று வந்து உள்ளது. இதனை தொடர்ந்து, லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் கோல்டி பிரார் ஆகிய இருவர் மீது மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பிரார் கனடாவில் வசிக்கிறார் என நம்பப்படும் சூழலில், பொதுமக்களின் பாதுகாப்புக்கு ஊறு விளைவிப்பார் என்று கருதப்படுகிறது. இதனால் கனடாவின் அதிகம் தேடப்படும் டாப் 25 நபர்களின் பட்டியலில் கடந்த மாதத்தில் அவர் சேர்க்கப்பட்டு உள்ளார்.
இந்த நிலையில், கோல்டி பிரார் அளித்த பேட்டியொன்றில் கூறும்போது, நாங்கள் சல்மான் கானை கொலை செய்வோம். நிச்சயம் கொலை செய்வோம். லாரன்ஸ் பாய் முன்பே கூறும்போது, மன்னிக்க மாட்டேன் என கூறியுள்ளார்.
இரக்க உணர்வு ஏற்படும்போது மட்டுமே பாபா இரக்கம் காட்டுவார் என லாரன்சை குறிப்பிட்டு பிரார் கூறியுள்ளார். சல்மான் கானை கொலை செய்வது வாழ்க்கையின் லட்சியம் என சிறையில் தள்ளப்பட்டு உள்ள லாரன்ஸ் பேட்டி ஒன்றில் பேசும்போது கூறிய விவரங்களையும் குறிப்பிட்டு பிரார் கூறியுள்ளார்.
தொடர்ந்து பிரார், நாங்கள் முன்பே கூறியது போன்று, சல்மான் கான் மட்டுமல்ல. நாங்கள் உயிருடன் இருக்கும் வரை எங்களுடைய அனைத்து எதிரிகளுக்கு எதிரான எங்களுடைய முயற்சிகளை நாங்கள் தொடர்வோம். சல்மான் கான் எங்களுடைய இலக்கு.
அதில் எந்த சந்தேகமும் இல்லை. நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்வோம். அதில் எப்போது வெற்றி பெறுகிறோமோ, அது உங்களுக்கு தெரிய வரும் என கூறி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளார். நடிகர் சல்மான்கான் அலுவலகத்துக்கு கடந்த மார்ச்சில் ரோகி கார்க் என்பவரிடம் இருந்து இ-மெயில் ஒன்று வந்தது.
அந்த இ-மெயிலில் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடப்பட்டு இருந்தது. அதில், சமீபத்தில் லாரன்ஸ் பிஷ்னோய் செய்தி சேனலுக்கு கொடுத்த பேட்டியை சல்மான்கான் பார்க்க வேண்டும். கோல்டி பாய் (கோல்டி பிரார்) இந்த பிரச்சினையை முடிக்க சல்மான்கானுடன் நேருக்கு நேர் பேச விரும்புகிறார்.
இந்த முறை நாங்கள் சரியான நேரத்தில் தகவல் தெரிவித்து இருக்கிறோம். அடுத்த முறை நீங்கள் அதிர்ச்சி மட்டுமே அடைவீர்கள் என இ-மெயில் தெரிவித்து இருந்தது. இந்த மெயில் சல்மான் கானின் நெருங்கிய உதவியாளரான பிரசாந்த் குஞ்சால்கருக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.
இந்த சம்பவத்திற்கு பின் நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. மிரட்டல் இ-மெயில் தொடர்பாக மும்பை போலீசார், பஞ்சாப்பை சேர்ந்த பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய், அவரது நண்பரான தாதா கோல்டி பிரார் மற்றும் ரோகித் கார்க் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
இவர்கள் மீது பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கொலை வழக்கும் உள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் சல்மான் கானுக்கு கடிதம் மூலம் லாரன்ஸ் பிஷ்னோய் கொலை மிரட்டல் விடுத்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ஊடகத்திற்கு அளித்த கோல்டி பிராரின் இந்த பேட்டி சல்மான் கானின் உறவினர்கள் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்து உள்ளது.