அதிகாரத்தின் ருசியை பரம்பரையாக ருசிக்கத் துடிப்பவனுக்கும், அதிகாரம் தனக்கான உரிமை என்பதை மறக்கடிக்கப்பட்டவனுக்கும் (மழுங்கடிக்கப்பட்டு) இடையேயான போராட்டமே ‘மாமன்னன்’.
சேலம் மாவட்டத்தில் ஆளும் கட்சியின் சார்பில் இரண்டு முறை எம்எல்ஏவாக இருக்கிறார் மாமன்னன் (வடிவேலு). அவரின் மகன் வீரன் அலைஸ் அதிவீரன் (உதயநிதி ஸ்டாலின்). அடிமுறை ஆசானாக இருக்கும் வீரன், சிறுவயதில் தான் சந்தித்த சாதிய அடக்குமுறையில் தந்தையின் செயல் பிடித்துப் போகாமல் அவருடன் ஆண்டுகள் கடந்தும் பேசாமல் இருக்கிறார். மாமன்னன் இருக்கும் அதே கட்சியின் மாவட்டச் செயலாளராக தந்தையின் வழித்தோன்றலில் (வாரிசு அரசியல்வாதியாக) ரத்னவேல் (ஃபஹத் ஃபாசில்) செயல்படுகிறார். கம்யூனிஸ்ட் தோழர் லீலா (கீர்த்தி சுரேஷ்) அதிவீரன் இடத்தில் நடத்தும் இலவச கோச்சிங் சென்டரை ரத்னவேலின் அண்ணன் அடித்துநொறுக்க பிரச்சினை அரசியலாகிறது. அந்த அரசியலில் ஆதிக்க வர்க்கத்தினர் எப்படி எளியவர்களின் உரிமைகளை அடக்கத் துடிக்கிறார்கள் என்பதை தற்போதைய சாதிய அரசியலை மையப்படுத்தி சொல்லப்பட்டிருப்பதே ‘மாமன்னன்’ படத்தின் திரைக்கதை.
‘எப்போதும் நின்று கொண்டு பேசாதீங்க… உட்கார்ந்து பேச பழகுங்க…’ என்று சமநிலை எண்ணம் கொண்ட மாமன்னன் வடிவேலுதான் படத்தின் கதாநாயகன். மாமன்னன், பேருக்கு ஏற்ப நடிப்பிலும் நிரூபித்திருக்கிறார். தன் மகனுக்கு நடந்த கொடுமைக்கு நீதியை பெற்றுத்தர முடியவில்லை என்ற விரக்தியில் அமைதியாக ஒரு பாறை மேல் நின்று கொண்டு ஏமாற்றத்துடனும், வலியுடனும் அவர் அழும் காட்சி படத்தின் ஆரம்பத்திலேயே மாமன்னனை நம்முள் கடத்திவிடுகிறது. அதேநேரம், அடக்குமுறையின் விரக்தியில் கையில் கத்தி எடுக்கும் தருவாய் வடிவேலுவுக்கான மாஸ்.
தமிழ் சினிமா இதுவரையில் இப்படியான வடிவேலுவை பார்த்ததில்லை என்பது படம் பார்க்கும் ரசிகர்களுக்கான ட்ரீட்.
நாயை இரக்கமின்றி அடித்துக்கொள்ளும் வில்லத்தனத்துடன் அறிமுகமாகும் ஃபஹத் ஃபாசிலின் மிரட்டல் நடிப்பால் படம் முழுக்க மொத்த திரையிலும் அவரையே தேட வைக்கிறது. தனக்கு மேல் உள்ளவர்களிடமும், தனக்கு சமமாக உள்ளவர்களிடமும் தோற்றுப் போனாலும் பரவாயில்லை; ஆனால், தனக்கு கீழ் உள்ளவர்களிடம் தோற்றுப்போய் அவமானப்பட கூடாது என்ற தந்தையின் கூற்றை வேத வாக்காக, அதிகாரத்தின் மூலம் அடுத்தவர்களை அடக்கி ஆளத் துடிக்கும் ஆதிக்கக் குணம் கொண்டு மாவட்டச் செயலாளராக பக்காவாக பொருந்திப் போயிருக்கிறார் ஃபஹத். கண் அசைவில், ஒற்றை பார்வையில் இவ்வளவு வில்லத்தனம்.
அதிவீரன் உதயநிதி… அப்பாவுக்கான உரிமையை பெறத் துடிக்கும் மகனாக, வலிகள் கொண்ட இளைஞனாக, ஆக்ரோஷமும், இறுக்கமும் கலந்த நடிப்பை சிறப்பாக கொடுத்துள்ளார். ஃபஹத், வடிவேலு என்ற இரு நடிப்பு அசுரர்கள் மத்தியில் கிடைத்த ஸ்பேஸை பயன்படுத்தி ஸ்கோர் செய்துள்ளார்.
பரியேறும் பெருமாள், கர்ணன் பாணியில் இல்லாமல் மாரி செல்வராஜின் புதிய கதாநாயகி லீலா. இடதுசாரி போராளியாக சில பல காட்சிகளே வந்தாலும், இதுவரை பார்த்திராத பாத்திரமாக வெளிப்பட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ். விஜயகுமார், அழகம் பெருமாள், கீதா கைலாசம், ரவீனா ரவி போன்ற எண்ணற்ற பாத்திரங்கள் இருந்தாலும், லால் மட்டுமே ஓரளவுக்கு ஸ்கோர் செய்கிறார். விஜயகுமார், ரவீனா ரவிக்கு ஒரு வசனம் கூட இல்லை.
தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு மாரி செல்வராஜ் காட்ட நினைத்த, களத்தை பார்வையாளனின் கண்முன் கச்சிதமாக கொண்டுசேர்த்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் ராசாக்கண்ணு உள்ளிட்ட பாடல்கள் ஏற்கெனவே ஹிட் என்றாலும், படத்துக்கு அவர் கொடுத்திருக்கும் பின்னணி இசை பேசப்பட வேண்டிய ஒன்று. காட்சிகளுக்கு வசனங்களே தேவையில்லை என்னும் அளவுக்கு பின்னணி இசை மூலம் காட்சியையும் காட்சியின் வலியையும் கடத்தியிருக்கிறார் ரஹ்மான்.
துணிந்து சொல்ல வேண்டிய கதைக்கரு, அதற்கு தகுந்த பலமான திரைக்கதை என ‘மாமன்னன்’ மாரி செல்வராஜின் படைப்பு (அரசியல்) என்பதை நிரூபித்துள்ளது. பலரும் சொல்ல துணியாத மேற்கு மாவட்ட அரசியல் மட்டுமல்ல, தற்போதைய சூழலும்கூட மாமன்னன் பேசும் அரசியல். ஒடுக்குமுறைக்குள்ளாகும் சமூகத்தின் பெயரை வெளிப்படையாக சொல்லி, அவர்கள் எப்படி ஆதிக்க வர்க்கத்தினர் அதிகாரத்தை கைப்பற்ற தேர்தல் அரசியலில் பகடைக் காயாக பயன்படுத்துகிறார்கள் என்பதை வெளிப்படையாக பேசிய விதத்தில் இயக்குநர் மாரியை வெகுவாகப் பாராட்டலாம்.
இங்கு அடையாளத்துக்காகவும், அரசியலுக்காக மட்டுமே சமூக நீதி பேசப்படுகிறது. அதிகாரமே வந்தாலும் சாதியம் ஒடுக்கப்பட்டவர்களை அடிமையாகவே நடத்த துடிக்கும் என்பதை மட்டுமல்ல, அதிகாரத்தை அடைய சாதியை தூண்டவும், சாதிய சங்கங்களின் காலில் தவழுவும் ஆதிக்கம் தயங்காது என்ற நிகழ்கால அரசியல் இழிவையும் மாரியின் திரைக்கதை விரிவாக அலசியுள்ளது.
நாட்டார் தெய்வம், நாய், புத்தர், பன்றி என வழக்கமான மாரியின் பல குறியீடுகளுக்கு மத்தியில் ‘யார் ஜெயிச்சங்கிறது முக்கியம் இல்ல, யார் பயந்தாங்கிறதுதான் முக்கியம்’,
‘நாலு பேரோட கொலை வெறி எப்படி 400 பேரோட மான பிரச்சினை ஆகும்’, ‘நாம கேள்வி கேட்கவே ஒரு பதவிக்கு, ஒரு இடத்துக்கு வரவேண்டியிருக்கு’, ‘ஏழைகள் கோவப்படவே இங்க தகுதி தேவைப்படுது’, ‘யுத்தம்னு வந்துட்டா பகை இருக்கக் கூடாது’ போன்ற கூர்மையான அரசியல்மிகு வசனங்கள் மாமன்னன் என்கிற படைப்பை பட்டை தீட்டியுள்ளன.
படத்தின் இன்டெர்வெல் காட்சி இன்டென்ஸ் மிகுந்த கூஸ்பம்ப்ஸ், எனினும் இரண்டாம் பாதியில் வணிகத்துக்காக சில சமரசங்கள் செய்யப்பட்டுள்ளன. இடைவேளைக்குப் பிறகு தேர்தல் களம், ஃபஹத் – உதயநிதி இருவரிடையேயான போட்டியில் யூகிக்கக் கூடிய காட்சிகள் போன்றவை படத்தை சற்று தொய்வாக்குகிறது. எனினும், க்ளைமாக்ஸ் காட்சியும், துணிந்து பேச வேண்டிய அரசியலும் மாமன்னனை எந்தவித சமரசமும் இல்லாமல் அரியணை ஏற்றுகிறது எனலாம். மொத்தத்தில், ‘மாமன்னன்’ பேச வந்த அரசியலும், பேசிய விதமும் கவனத்துக்குரியது.