இந்தியாவில் இதுவரை இல்லாத மிக மோசமான விபத்தாக கூறப்படும் ஒடிசா ரெயில் விபத்து நடந்து இன்றுடன் ஒரு மாதம் ஆகிறது. ஜூன் 2ல் , பஹானகா ரெயில் நிலையத்தில் வேகமாக வந்த கோரமண்டல் ரெயில், சரக்கு ரெயில் மீது மோதியது.
அதே சமயம், கோரமண்டல் பெட்டிகள், பக்கவாட்டில் சென்று கொண்டிருந்த யஸ்வந்த்பூர் ரெயில் மீது மோதியதில், 2 ரெயில்களிலும் பல பெட்டிகள் தடம் புரண்டன. ஒட்டுமொத்த நாடும் உலகமும் திரும்பி பார்க்க வைத்த இந்த விபத்தில் 292 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆயிரகணக்கானோர் காயமடைந்தனர். இன்றுடன் ஒரு மாதம் கடந்துவிட்டாலும், பயங்கரமான ரெயில் விபத்து பற்றிய நினைவுகள் இன்னும் மனதில் நீங்கவில்லை என்றே சொல்ல வேண்டும். விபத்தில் உயிரிழந்த 292 பேரில் 82 பேரின் உடல்கள் இன்னும் மருத்துவமனையில் தான் உள்ளது.
இதில் 29 பேரின் உடல்களை அடையாளம் கண்டு குடும்பத்தினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், இன்னும் 52 பேரின் உடல்கள் அடையாளம் காண முடியாத நிலை நீடித்து வருவது பெரும் வேதனை அளிக்கும் விஷயமாக உள்ளது. இந்த விபத்துக்குறித்து பலவித சந்தேகங்கள் ஏற்பட்ட நிலையில், இந்த வழக்கு விசாரணை சிபிஐ ஒப்படைக்கப்பட்டது.
இது தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த பாலசோர் மாவட்டம் பஹானகா ரெயில் நிலையத்தில் விசாரணையை தொடங்கியது. இதில் முதற்கட்ட விசாரணையில் கணினி மூலம் இயங்கும் இந்த இண்டர்லாக்கிங் அமைப்பை, பராமரிப்பு பணிகள் காரணமாக ரெயில் நிலைய அதிகாரி அணைத்துவிட்டு, கிரீன் சிக்னல் கொடுத்ததால் இந்த பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது என்று என்று சிபிஐ தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நடந்து சில வாரங்களுக்குப் பிறகு தென்கிழக்கு ரயில்வேயின் ஐந்து மூத்த அதிகாரிகளை இந்திய ரெயில்வே இடமாற்றம் செய்துள்ளது. இடமாற்ற உத்தரவுகளில் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டதற்கான எந்த காரணமும் குறிப்பிடப்படவில்லை.