இலங்கையின் மூத்த தமிழ் அரசியல் தலைவர்களில் ஒருவரான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் நினைவு தினம் இன்றாகும். அவர் 1989 ஆம் ஆண்டு ஜூலை 13- ஆம் திகதி புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அமரர் அமிர்தலிங்கம் அவர்கள் தமிழினத்தின் அரசியல் விடுதலைக்காக இறுதிவரை குரல் கொடுத்தார். அவரது மறைவு தமிழர்களுக்கு அன்று பேரிழப்பாக இருந்தது.
தமிழ் பேசும் மக்கள் வரலாற்று ரீதியாக வாழ்ந்துவந்த வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் போதியளவு சுயாட்சியுடன் அரசியல் தீர்வுத் திட்டம் கிடைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அமரர் அமிர்தலிங்கம் பாடுபட்டு வந்தார்.
ஆரம்பத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியில் 1956- ஆம் ஆண்டில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவான அமிர்தலிங்கம், 1972 ஆ-ம் ஆண்டில் தமிழ்க் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, 1977 ஆ-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியில் வெற்றிபெற்று எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்றிருந்தார்.
தமிழர் விடுதலைக் கூட்டணி, முன்னாள் தலைவர் அமிர்தலிங்கம் மறைந்த 24 ஆண்டு நினைவு தினம் இன்று உலகின் பல இடங்களில் தமிழ் மக்களால் நினைவு கூரப்படுகின்றது.