புகலிட இலக்கிய வாழ்வியல் சாதனையாளர் முருகபூபதி

அவுஸ்திரேலியாவில் தமிழ் எழுத்தாளன் எனும் அடையாளத்தின் முகவரியாளராக மிளிர்பவர் லெ.முருகபூபதி. அவரின் பிறந்ததினமான இன்று இச்சிறப்புக் கட்டுரை பிரசுரமாகிறது

எழுத்தாளன் என்ற அடையாளம்தான் எனது முகவரியென்றால், அதனை தக்கவைத்துக் கொள்ள வேண்டியதும் எனது பொறுப்பாகும். ஆயினும் என்னை நேசிக்கின்ற இலக்கியவாதிகள் இலங்கையில் மட்டுமன்றி உலகெங்கும் பரந்து வாழ்ந்து,’மனிதன்’ என்ற முகவரியை எனக்கு தந்திருக்கிறார்கள். அதனை தக்கவைத்துக் கொள்வதுதான் எனது வாழ்வும் பணியுமாகும் என மெல்பேர்னில் இருந்து தமிழ் முழங்கும் லெட்சுமணன் முருகபூபதி, தன் வாழ்வையே எழுத்துலகுக்கு அர்ப்பணித்துள்ளார்.

“எழுத்து எனது தொழில். இலங்கையில் எனக்கு சோறுதந்த தொழில். அதனால் அதனைவிட்டு நான் அகலமாட்டேன். புகலிடத்தில் வேறு தொழில்களில் ஈடுபட்டு குடும்பத்திற்காக உழைத்தபோதிலும் நான் ஊதியம் எதுவும் பெறாமலேயே எழுத்துத்துறையில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளேன்” எனக்கூறும் முருகபூபதிக்கு தற்போது கனடாவில் எழுத்தாளர் இயல் விருது கிடைத்திருப்பது பெருமைக்கு உரியதாகும்.

“எனது வாழ்நாளில் கலை, இலக்கியவாதிகளை மாத்திரமின்றி அரசியல் தலைவர்கள், தொழிற்சங்கவாதிகள், சமூக சேவையாளர்கள், பிரமுகர்கள், தொழிலாளர்கள் உட்பட பலதரப்பட்டவர்களையும் பத்திரிகை, சஞ்சிகைகளுக்காக நேரில் சந்தித்திருக்கின்றேன். பொதுவாழ்க்கை எனக்குப் புதியதல்ல. தாயகத்திலும் பல்வேறு பொதுப்பணிகளில் ஈடுபட்டேன். இன்றும் அவுஸ்திரேலியாவிலும் இலங்கையிலும் பொதுவேலைகளில் ஈடுபடுகின்றேன். இலக்கியம், எழுத்து பொதுவாழ்க்கை என்பனதான் எனது வாழ்க்கை என முருகபூபதி எடுத்துரைக்கின்றார்.

லெ.முருகபூபதி சமூக கலை இலக்கிய செயற்பாட்டாளராக தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றார். நீர்கொழும்பு இலக்கிய வட்டத்தின் செயலாளராகவும், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தேசியசபை உறுப்பினராகவும், அதனது கொழும்புக் கிளையின் செயலாளராகவும் இருந்தவர். அதன் பின்னர் 1987ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து, இங்கு தமிழ் எழுத்தாளர் விழாக்களை நடாத்துவதில் முன்னின்று உழைப்பது கவனத்துக்குரியது. 2011 ஆம் ஆண்டில் கொழும்பில் நடைபெற்ற சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் பிரதம இணைப்பாளராகச் செயற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

லெ.முருகபூபதி படைப்புக்கள்:

முருகபூபதி 1972 இல் ‘கனவுகள் ஆயிரம்’ சிறுகதை மூலமாக மல்லிகையில் அறிமுகமானார். 1975 இல் வெளியான ‘சுமையின் பங்காளிகள்’ என்ற இவரின் முதலாவது சிறுகதைத் தொகுதிக்கு இலங்கை சாகித்திய மண்டல விருது கிடைத்தது. வீரகேசரி நாளிதழில் துணை ஆசிரியராக பணியாற்றியவர். ரஸஞானி, ரிஷ்யசிங்கர் என்ற புனைபெயர்களிலும் எழுதி வருகிறார்.

1975 இல் வெளியான லெ.முருகபூபதியின் சிறுகதைத் தொகுதியான ‘சுமையின் பங்காளிகள்’ இலங்கை தேசிய சாகித்திய விருது பெற்றது. அத்துடன் சமாந்தரங்கள் (1989),வெளிச்சம் (1998),எங்கள் தேசம் (2000), கங்கை மகள் (2005), நினைவுக்கோலங்கள் (2006), மதக செவனெலி (Shadows Of Memories) – மொழிபெயர்ப்பு (2012), கதைத் தொகுப்பின் கதை (2021), பறவைகள் (2001) ஆகிய சிறுகதைத் தொகுதிகளையும் அவர் படைத்துள்ளார்.

சிறுவர் இலக்கியமான ‘பாட்டி சொன்ன கதைகள்’ (1997) என்று பல நூல்களை அவர் படைத்துள்ளார். நூறுக்கும் மேற்பட்ட கலை, இலக்கிய ஆளுமைகளின் வாழ்வையும் பணிகளையும் சித்திரிக்கும் பத்தி எழுத்துக்களை தொடர்ந்து எழுதிவருகின்றார். இவருடைய சிறுகதைகள் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் வெளியாகியுள்ளன.

அவுஸ்திரேலியாவில் தமிழ்ப் பணி :

அவுஸ்திரேலியாவில் தமிழ் எழுத்தாளர் விழாக்களை நடத்துவதில் முன்னின்று உழைத்துவரும் இவர் அவுஸ்திரேலியா தமிழ் அகதிகள் கழகம், அவுஸ்திரேலியா தமிழர் ஒன்றியம், அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் என்பவற்றை உருவாக்குவதிலும் முன்னின்று உழைத்து வருகின்றார்.

1987ல் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த பின்னரும், தொடர்ந்து சிறுகதை, கட்டுரை, பேட்டி, பயண இலக்கியம் என தொடர்ந்து எழுதியும் வெளியிட்டும் வருகிறார்.

கடித இலக்கியமான ‘கடிதங்கள்'(2001), நேர்காணல் சந்திப்பு (1998) இலக்கிய மற்றும் ஊடக வாழ்வில் சந்தித்த ஆளுமைகளின் கருத்துக்களை தொகுத்து எழுதிய நூல், மற்றும் கட்டுரை நூல்களான நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள் (1995) தமிழ், சிங்கள, முசுலிம், சோவியத் உக்ரைன் இலக்கிய நண்பர்கள் 12 பேரைப்பற்றிய நினைவுத்தகவல்கள், இலக்கிய மடல் (2000), மல்லிகை ஜீவா நினைவுகள் (2001), எம்மவர் (2003), அவுத்திரேலியத் தமிழ் எழுத்தாளர்கள் பற்றிய விபரத்திரட்டு நூல்களையும் எழுதியுள்ளார்.

கவிஞர் அம்பி வாழ்வும் பணியும் (2004), ராஜஸ்ரீகாந்தன் நினைவுகள் (2005), உள்ளும் புறமும் (2011, சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் தோற்றமும் வளர்ச்சியும் பயன்பாடும், சொல்ல மறந்த கதைகள் (2014), சொல்ல வேண்டிய கதைகள் (2017), சொல்லத்தவறிய கதைகள் (2019), இலங்கையில் பாரதி – ஆய்வு நூல் (2019), நடந்தாய் வாழி களனி கங்கை (2021), யாதுமாகி (2022), வாழும் வரலாறு மல்லிகை ஜீவா (2022) என இதுவரையில் பல நூல்களை முருகபூபதி படைத்துள்ளமை வரலாற்றுச் சாதனையாகும்.

“எனது சில கதைகள் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவற்றை மொழிபெயர்த்தவர்கள் பார்வையில் அவை உச்சமாக இருந்திருக்கலாம் எனக் கூறும் முருகபூபதி பெற்ற விருதுகள் பல. சுமையின் பங்காளிகள் நூலுக்கு 1975 ஆம் ஆண்டு சிறந்த சிறுகதைத் தொகுதிக்கான இலங்கை அரசின் தேசிய சாகித்திய விருது கிடைத்தது.

‘பறவைகள்’ நூலுக்கு 2002 ஆம் ஆண்டு சிறந்த நாவலுக்கான இலங்கை அரசின் தேசிய சாகித்திய விருது கிடைத்தது. அத்துடன் 2002 அவுஸ்திரேலியா தினத்தில் சிறந்த பிரஜைக்கான விருதும் கிடைத்தது.

முருகபூபதிக்கு அவுஸ்ரேலிய பல்தேசிய கலாசார ஆணையத்தின் விருது 2012இல் கிடைத்தது. பின்னர் அக்கினிக்குஞ்சு இணைய இதழ் 2018 இல் வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருதையும் முருகபூபதி பெற்றார்.

ஐங்கரன் விக்கினேஸ்வரா…

Related posts