கிராண்ட் கிராஸ் ஆஃப் தி லீஜியன் ஆஃப் ஹானர் எனும் பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரானால் வழங்கப்பட்டது.
பிரான்ஸ் அதிபரின் அழைப்பை ஏற்று, அந்நாட்டின் தேசிய தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி பாரிஸ் சென்றுள்ளார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்ன், பிரதமர் நரேந்திர மோடியை விமான நிலையத்திற்கு வந்து வரவேற்றார். இதையடுத்து, அதிபர் இம்மானுவேல் மேக்ரனை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடிக்கு, இம்மானுவேல் மேக்ரன், தங்கள் நாட்டின் உயரிய விருதான கிராண்ட் கிராஸ் ஆஃப் தி லீஜியன் ஆஃப் ஹானர் விருதை வழங்கி கவுரவித்தார். இதற்கு முன் இந்த விருதை, தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா, இங்கிலாந்தின் தற்போதைய அரசர் சார்லஸ், ஜேர்மனியின் முன்னாள் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் உள்ளிட்ட தலைவர்கள் இந்த விருதினைப் பெற்றுள்ளனர்.
இது குறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இந்தியாவுடனான நட்புணர்வை உயர்ந்த நிலையில் வெளிப்படுத்தும் வகையில், பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான கிராண்ட் கிராஸ் ஆஃப் தி லீஜியன் ஆஃப் ஹானர் விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிபர் இம்மானுவேல் மேக்ரானால் வழங்கப்பட்டது. இந்த சிறப்பு மரியாதைக்கு இந்திய மக்கள் சார்பாக அதிபர் மேக்ரானுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்” என்று தெரிவித்துள்ளார். இந்த விருது 1802 ஆம் ஆண்டு, நெப்போலியன் போனபார்ட்டால் நிறுவப்பட்டது. இந்த விருது குறிப்பாக பிரான்ஸ் நாட்டவர்களுக்கானது என்ற போதிலும், பிரான்ஸ்-ன் இலட்சியங்களுக்கு உதவும் வெளிநாட்டுத் தலைவர்களுக்கும் வழங்கப்படுகிறது.
முன்னதாக, பிரான்ஸ் அதிபரும், அவரது மனைவி பிரிஜிட் மேக்ரானும் எலிசி அரண்மனையில் பிரதமர் மோடிக்கு சிறப்பு இரவு விருந்து அளித்தனர். இதன் தொடர்ச்சியாக, பிரான்ஸ் நாட்டில் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, “பணமற்ற பரிவர்த்தனையை மேற்கொள்ளும் வகையில் இனி பிரான்சிலும் UPI பயன்படுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுகிறது. இந்தியா வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. உலகம் ஒரு புதிய பாதையை நோக்கி நகர்கிறது. இந்தியாவின் வலிமையும், பங்களிப்பும் மிக விரைவாக மாறுகிறது. பிரான்சில் உள்ள மார்சேயில் புதிய இந்திய துணை தூதரகம் திறக்கப்படும். ஐரோப்பிய நாட்டில் முதுகலை பட்டம் பெறும் இந்திய மாணவர்களுக்கு ஐந்தாண்டு கால படிப்புக்கு பிந்தைய பணி விசா கிடைக்கும்.
நான் பல முறை பிரான்சிற்கு வந்திருக்கிறேன். ஆனால், இந்த பயணம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில், இந்தியா – பிரான்ஸ் இடையேயான ஆதரவும், உறவும் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வலிமை அடைந்துள்ளது. இரு நாடுகளின் கூட்டாண்மையின் 25 வது ஆண்டு நிறைவை இந்த ஆண்டு குறிக்கின்றது. இரு நாட்டு மக்களுக்கு இடையேயான இணைப்பு அதிகரித்துள்ளது. பிரான்சில் வாழும் இந்தியர்கள், இந்தியாவில் முதலீடு செய்ய முன்வர வேண்டும். முதலீடுகளை ஈர்ப்பதில் இந்தியா கவர்ச்சிகரமான திட்டங்களைக் கொண்டுள்ளது. நாடு வேகமாக முன்னேறி வருவதால் இந்திய முதலீட்டாளர்கள் அதன் பலனை பெற்று வருகிறார்கள்” என தெரிவித்தார்.