ஜீவிதா 1980-களில் தமிழில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார்.
ஜீவிதா, ராஜசேகர் இருவரும் திருமணம் செய்து கொண்டு ஐதராபாத்தில் வசிக்கிறார்கள்.
இந்த நிலையில் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி நடத்தும் ரத்த வங்கி குறித்து பல வருடங்களுக்கு முன்பு இருவரும் சர்ச்சை கருத்தை வெளியிட்டனர். நன்கொடையாக பெறப்படும் ரத்தத்தை சிரஞ்சீவி வெளி மார்க்கெட்டில் விற்கிறார் என்று அவர்கள் குற்றம் சாட்டி இருந்தனர்.
இதையடுத்து ஜீவிதா, ராஜசேகர் ஆகியோர் மீது சிரஞ்சீவியின் உறவினரும், தெலுங்கு தயாரிப்பாளருமான அல்லு அரவிந்த் 2011-ல் கோர்ட்டில் மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார்.
சேவை மனப்பான்மையோடு நடத்தும் ரத்த வங்கி குறித்து இருவரும் ஆதாரமில்லாமல் பொய்யான குற்றச்சாட்டு கூறி இருப்பதாக மனுவில் தெரிவித்து இருந்தார்.
இந்த வழக்கை ஐதராபாத் நாம் பள்ளியில் உள்ள 17-வது கூடுதல் மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் சாய் சுதா விசாரித்து ஜீவிதா, ராஜசேகர் ஆகியோருக்கு ஒரு வருடம் ஜெயில் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கினார்.
பின்னர் இருவருக்கும் கோர்ட்டிலேயே அப்பீலுக்கு செல்ல வாய்ப்பு அளித்து ஜாமீனும் வழங்கப்பட்டது.