நுண்கடன் நிதி திட்டத்தால் கிராமப்புற மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், நுண்கடன் நிதி திட்டம் புற்றுநோய் போல் பரவியுள்ளதாக, நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
இதனால் கீழ்மட்ட மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் (20) நடைபெற்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பிரமிட் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக பல கருத்துகள் முன்வைக்கப்பட்டன. ஆசிய வலயத்துக்குட்பட்ட சிங்கப்பூர் நாட்டில் முதலாவதாக பிரமிட் கொடுக்கல், வாங்கல் இடம்பெற்ற போது, 1973ஆம் ஆண்டு காலப்பகுதியில் பிரமிட் கொடுக்கல் முறைக்கு எதிராக சட்டம் இயற்றப்பட்டு, அந்த முறைமைக்கு அங்கு தடை விதிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, பிரமிட் கொடுக்கல், வாங்கல் மலேசியாவுக்கு சென்றது. அங்கும் தடை விதிக்கப்பட்டதன் பின்னர், தற்போது இலங்கையில் இந்த முறைமை ஆதிக்கம் செலுத்தியுள்ளது. பிரமிட் கொடுக்கல், வாங்கல் முறைமை தொடர்பாக மத்திய வங்கி பல முறை அறிவுறுத்தல்களை விடுத்துள்ளது. ஆனால், அவற்றை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆகவே, பாராளுமன்றத்தினூடாக அந்த முறைமைக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும்.
இதேவேளை, நுண்கடன் நிதி திட்டத்தால் கிராமப்புற மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
நுண்கடன் நிதி திட்டம் புற்றுநோய் போல் பரவியுள்ளது. இதனால் கீழ்மட்ட மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் மத்திய வங்கிக்கு உண்டு. ஆனால், அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனியும் எடுக்கப் போவதில்லை. என்றார்.