உலக வரலாற்றில் மனிதகுலத்துக்கு மனிதனே ஏற்படுத்திய பேரழிவுகளை வரிசைப்படுத்தினால் அதில் ஜப்பானின் ஹிரோஷிமா – நாகசாகி மீது அமெரிக்கா அணுகுண்டு வீசிய சம்பவம் முன்னிலை வகிக்கும். சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் உயிர்களைக் குடித்த அந்தக் கொடூரம் மனிதகுலத்துக்கு மாபெரும் தலைகுனிவை ஏற்படுத்திய துர்நிகழ்வுகளில் ஒன்று.
உலக நாடுகளின் வரலாற்றையே மாற்றி எழுதிய இந்தச் சம்பவத்துக்கு காரணமாக இருந்த அணுகுண்டை உருவாக்கிய ராபர்ட் ஜே.ஒப்பன்ஹைய்மரின் வாழ்க்கைப் பின்னணியில் கிறிஸ்டோபர் நோலன் உருவாக்கியுள்ள வரலாற்று ஆவணம்தான் இந்த ‘ஓப்பன்ஹைய்மர்’ திரைப்படம்.
ஓப்பன்ஹைமர் (சிலியன் மர்ஃபி) ரஷ்ய கம்யூனிஸ்ட்களுக்கு உதவினாரா என்ற விசாரணையின் பின்னணியில்தான் முழுப் படமும் சொல்லப்படுகிறது. 1920-களில் இங்கிலாந்து மற்றும் ஜெர்மனியில் உள்ள புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் தனது மேற்படிப்பை தொடரும் இளம் வயது ஓப்பன்ஹைமர் நமக்கு காட்டப்படுகிறார்.
தொடர்ந்து கம்யூனிஸ்ட்களுடனான அவரது நட்பு, ஜீன் டேட்லாக் (ஃப்ளோரன்ஸ் பக்) உடனாக காதல், ஹிட்லரின் நாஜிப் படையினருக்கு எதிரான போரில் ஒப்பன்ஹைமரின் பங்கு என அடுத்தடுத்து காட்சிகள் நகர்கின்றன.
சொந்த நாடு திரும்பும் அவர், அமெரிக்க அரசின் ‘புராஜெக்ட் மன்ஹாட்டான்’ என்ற ஒரு திட்டத்துக்குள் கொண்டுவரப்படுகிறார். இந்தத் திட்டத்தின் நோக்கம் என்ன? அதன் முடிவு என்னவாக இருக்கும் என்பது குறித்த எந்த பிரக்ஞையும் அவருக்கு இல்லை. இந்த திட்டத்துக்காக அமெரிக்காவின் லாஸ் அலமாஸ் என்ற செவ்விந்தியர்களுக்கு சொந்தமான இடத்தில் ஒரு தனி நகரமே உருவாக்கப்படுகிறது.
அங்குதான் உலகையே புரட்டிப் போடும் அந்தக் கண்டுபிடிப்பை தனது சகாக்களுடன் நிகழ்த்துகிறார்.
சுயநலம் கொண்ட ஒரு மனிதனின் ஈகோவால் பொய்க் குற்றச்சாட்டுக்கு ஆளாகி குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்படுகிறார். தன் மீதான புகார்களை ஒப்பன்ஹைமர் உதறித் தள்ளினாரா என்பதை ஒரு சிறிய ட்விஸ்ட் உடனும் நிறைய்ய்ய்ய வசனங்களுடன் சொல்லியிருக்கிறார் நோலன்.
படத்தின் இரண்டாம் பாதியின் பிற்பகுதியில் ஒரு காட்சி. ஹிரோஷிமா – நாகசாகி சம்பவத்துக்குப் பிறகு அமெரிக்காவின் அப்போதைய அதிபராக இருந்த ஹாரி ட்ரூமேன், ஒப்பன்ஹைமரை நேரில் பாராட்ட அழைக்கிறார். வெள்ளை மாளிகைக்குச் செல்லும் ஒப்பன்ஹைமர் அதிபரின் முகத்துக்கு நேரே, ‘மிஸ்டர் ப்ரெசிடென்ட், என் கைகளில் ரத்தக் கறை படிந்திருப்பதைப் போல உணர்கிறேன்’ என்று சொல்கிறார்.
இதுதான் ‘ஓப்பன்ஹைமர்’ படத்தின் அடிநாதம். இது வெறுமனே அணுகுண்டு வெடிப்பை 70MM திரையில் பிரம்மாண்டமாக காட்டும் ஒரு திரைப்படமல்ல. அரசியல் சுழலில் அலைகழிக்கப்பட்டு குற்ற உணர்ச்சியில் தவிக்கும் ஒரு சூழ்நிலைக் கைதியின் கதை.
ஹீரோவாக கொண்டாடப்பட்ட ஒருவன், தனி மனிதனின் ஈகோவால் ஜீரோவாக கீழிறக்கப்படும் கதை.