ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, வருகிற 10-ந்தேதி திரைக்கு வர உள்ளது. ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், இந்த படத்தில் நடித்துள்ள சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராப், யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் கோலாகலமாக நடந்தது.

விழாவிற்கு தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான ரசிகர்கள் வந்து பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:- “அண்ணாத்த படத்திற்கு பின்னர், என்னிடம் கதை சொல்ல பல இயக்குனர்கள் வந்தார்கள். அவர்கள் கூறிய கதை எல்லாம் பாட்ஷா அல்லது அண்ணாமலை படம் சாயலில் இருந்ததால், நிறைய கதைகளை நிராகரித்தேன்… அது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.

ஜெயிலர்’ அறிவிப்புக்கு பிறகுதான் பீஸ்ட் வெளியானது. நிறைய பேர் என்னிடம் நெல்சனுக்குதான் படம் கொடுக்க வேண்டுமா? என யோசிக்க சொன்னார்கள். ஆனால், எப்போதுமே ஒரு இயக்குநர் தோற்பதில்லை. அவர் எடுக்கும் சப்ஜெக்ட்டுகள்தான் தோற்கிறது ஒரு படத்திற்கு தயாரிப்பாளர் அப்பா என்றால் இயக்குனர் அம்மா. நல்ல கதை மிகவும் முக்கியம்.

நெல்சன் திலீப் குமாரை 10 மணிக்கு கதை சொல்ல வர சொன்னேன். அவர் கொஞ்சம் சாவகாசமாக 12 மணிக்கு தான் வந்தார். வந்ததுமே ஒரு நல்ல காபி கொடுங்க என கேட்டார் நெல்சன் முதலில் ‘ஜெயிலர்’ படத்தின் ஒன்லைன் சொன்னார். சொல்ல சொல்ல என்னை அப்படியே உத்து பார்த்தாரு.

‘இவன் ஹீரோவா எப்டி?’ ன்னு அவர் மனசுல நினைச்சது எனக்கு கேட்டுடிச்சு. ஆனாலும் அந்த ஒன்லைன் எனக்கு பிடிச்சிருந்தது. அப்பறம் பீஸ்ட் படத்த முடிச்சிட்டு வரேன்னு கிளம்பிட்டாரு. படத்துல பிளாக் காமெடி எல்லாம் இருக்கு. சீரியஸான சீன்ல எல்லாம் காமெடி பண்ணுவார் நெல்சன். ‘காவாலா’ சாங்க்ல எனக்கு நிறைய ஸ்டெப்ஸ் இருக்குனு பில்டப் கொடுத்து கூட்டிட்டு போனாங்க.

ஆனா, ரெண்டே ஸ்டெப் கொடுத்துட்டு போதும்னு சொல்லிட்டாங்க. தமிழ் சினிமா உலகம், தங்களுக்குள் போட்டி பொறாமை என்று எதுவும் இல்லாமல், நல்ல தமிழ் படங்களை பார்த்து அதனை வெற்றி பெற வைக்க வேண்டும் கேஜிஎப் மற்றும் காந்தாரா படங்களின் மூலம் கன்னட உலகம் வேறு பரிமாணத்திற்கு சென்று கொண்டிருக்கிறது.

பாகுபலி, ஆர்ஆர்ஆர் மற்றும் புஷ்பா படங்கள் மூலம் தெலுங்கு திரைப்படங்களும் வேறு ஒரு பரிமாணத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. காட்டில் பெரிய மிருகங்களை எப்போதும் சிறிய மிருகங்கள் சீண்டி கொண்டே இருக்கும். காக்கா, கழுகை சீண்டி கொண்டே இருக்கும்.

கழுகு எப்போதும் அமைதியாக இருக்கும். கழுகை விட காக்கா உயர பறக்க நினைக்கும். ஆனால் முடியாது. கழுகு இறக்கையை கூட ஆட்டாம எட்ட முடியாத உயரத்துக்கு பறந்து போயிட்டே இருக்கும். உலகின் உன்னதமான மொழி மவுனம் தான். நம்ம வேலையை பார்த்துக்கிட்டு நாம் போய்க்கிட்டே இருக்கணும். நான் காக்கா கழுகுன்னு சொன்ன உடனே, இவரை தான் சொல்றேன்னு சோஷியல் மீடியால சொல்லுவாங்க. குரைக்காத நாயும் இல்லை. குறை சொல்லாத வாயும் இல்லை.

குடிப்பழக்கம் என்னிடம் இல்லாமல் இருந்திருந்தால் இப்போது இருப்பதை விட எங்கோ உயரத்தில் இருப்பேன். குடிப்பழக்கம் எனக்கு நானே வைத்துக்கொண்ட சூனியம். நீங்க குடிப்பதினால் குடும்ப வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. அதனால் தயவு செய்து குடிக்காதீர்கள்.

படத்தில் உள்ள ஹூக்கும் பாடலில் இடம்பெற்றுள்ள சூப்பர் ஸ்டார் என்பதை மட்டும் எடுக்க சொன்னேன். அது எப்போதுமே தொல்லை தான். 1977-லிலேயே இந்த பிரச்சினை ஆரம்பித்தது. ஒரு படத்தின் டைட்டிலில் சூப்பர் ஸ்டார் என்று போட்டார்கள்.

அதை நான் வேண்டாம் என்று சொன்னேன். காரணம் அப்போது கமலும், சிவாஜியும் பெரிய ஹீரோ. அதனால் வேண்டாம் என்று சொன்னேன். உடனே என்னை பயந்துட்டேன் என்று சொன்னார்கள். நாம பயப்படுகிற இரண்டு பேர் ஒன்று கடவுள். இன்னொன்று நல்லவர்கள். இவ்வாறு ரஜினி பேசினார்.

Related posts