சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் ரஜினிகாந்துக்கு தமிழக மக்கள் வழங்கியது, மக்கள் விரும்பினால் அந்த பட்டத்தை யார் வேண்டுமானாலும் வாங்கலாம் என ரஜினிகாந்தின் சகோதரர் சத்யநாராயணன் தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆண்டியப்பனூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பாப்பாத்தி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நடிகர் ரஜினிகாந்த்தின் சகோதரர் சத்யநாராயணன் வியாழக்கிழமை வந்தார்.
அப்போது, செய்தியாளர்களிமட் அவர் கூறியதாவது,‘‘ திருப்பத்தூர் மாவட்டம், ஆண்டியப்பனூர் கிராமத்தில் உள்ள பாப்பாத்தி அம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடக்கிறது. இங்கு சாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.எனவே பக்தர்கள் வசதிக்காக ஆண்டியப்பனூர் கூட்டு ரோட்டில் இருந்து கோயில் வரை சாலை வசதிகளை மாவட்ட நிர்வாகம் அமைத்து தர முன் வர வேண்டும்.
பொதுமக்களின் ஆசிர்வாதத்தினால் என் தம்பி நடிகர் ரஜினிகாந்த் மக்களுக்கு பல வகையில் சேவை செய்து வருகிறார். வரும் 10ம் தேதி ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் வெளியாகிறது. பாப்பாத்தி அம்மன் அருளால் இத்திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெறும்.
நடிகர் ரஜினிகாந்த் இன்னும் 10-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடிக்க உள்ளார். அதில் தற்போது 5 படங்கள் ரிசர்வ் செய்யப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் ரஜினிகாந்த்துக்கு மக்கள் வழங்கியது. மக்கள் விரும்பினால் அந்தப் பட்டம் யார் வேண்டுமானாலும் வாங்கட்டும்’’.இவ்வாறு அவர் கூறினார். ஆடிப்பெருக்கை முன்னிட்டு கோயில் சுவாமி தரிசனம் செய்த சத்யநாராயணன் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.