எரியும் மணிப்பூர்…! பார்த்து சிரிக்கும் பிரதமர் மோடி….!

மக்களவையில் பிரதமர் நரேந்திரமோடி பேசியது குறித்து டெல்லியில் காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:- மணிப்பூர் தற்போது இரு மாநிலங்களாக பிரிந்து நிற்கிறது. மணிப்பூரில் கலவரம் ஏன் நடக்கிறது என்பது தான் விஷயம்.

அதற்கு மாறாக பிரதமர் கிண்டல் செய்திருக்கக் கூடாது. மணிப்பூர் விவகாரத்தில் பிரதமரும், மத்திய மந்திரி அமித்ஷாவும் பாரத மாதாவை கொன்றுவிட்டார்கள். மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருக்கும் நிலையில் அதை மறந்தது போல் பிரதமர் மோடி பேசினார். மணிப்பூரில் பாரதமாதா கொலை செய்யப்பட்டதாக நான் கூறியதை திரித்துக்கூறுகிறார்.

மணிப்பூருக்கு ராணுவத்தை அனுப்பி இருக்க வேண்டும். இந்திய ராணுவத்தை மணிப்பூரில் அனுமதித்து இருந்தால் 2 நாளில் அமைதி கிடைத்திருக்கும். மணிப்பூர் விவகாரம் பற்றி மக்களவையில் பிரதமர் மோடி 2 மணி நேரம் பேசியதில் நகைச்சுவை தான் இருந்தது. மணிப்பூர் நிலவரம் அரசின் கட்டுப்பாட்டிலேயே இல்லை என்பது தான் தற்போதைய சூழல்.

ராணுவம் மீது நம்பிக்கை இல்லாததால் மணிப்பூருக்கு அனுப்பாமல் உள்ளார் பிரதமர் மோடி. தீவிரமான ஒரு விஷயத்தை எந்த ஒரு பிரதமரும் இப்படி கையாண்டுள்ளனரா என்பது தெரியவில்லை. மணிப்பூர் மாநிலம் தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்க வேண்டும் என்று தான் பிரதமர் நினைக்கிறார்.

காங்கிரஸ் கட்சி ஆட்சியின் போது இருந்த பிரதமர்கள், பா.ஜ.க.வின் வாஜ்பாய் மற்றும் மற்ற பிரதமர்களான தேவகவுடா உள்ளிட்டோர் பேசியதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால், ஒரு பிரதமர் இவ்வளவு மோசமாக நாடாளுமன்றத்தில் நடந்து கொண்டதை பார்த்ததே கிடையாது.

என் அரசியல் அனுபவத்தில் எங்கும் கண்டிராத துயரத்தை மணிப்பூரில் பார்த்தேன். அதைத் தான் நாடாளுமன்றத்திலும் பேசினேன். பிரதமர் மோடி கட்டாயம் மணிப்பூர் செல்ல வேண்டும். பிரதமருக்கான கடமை என்ன என்பதே நரேந்திரமோடிக்கு தெரியவில்லை.

நான் மீண்டும் கூறுகிறேன் மணிப்பூர் மாநிலத்தில், இந்தியாவின் அடிப்படை கருத்தியலை பா.ஜ.க. கொலை செய்துவிட்டது. மணிப்பூரில் நடக்கும் கலவரத்தை நிறுத்துவது தான் எங்களது லட்சியம். அதற்காக என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வோம் என்றார்.

Related posts