கெக்கிராவ பிரதேச பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 14 வயது மாணவி ஒருவர் நேற்று (17) மது அருந்தி விட்டு பாடசாலைக்கு சென்ற நிலையில் மாணவியை கைது செய்த பொலிஸார் அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட மாணவி பாடசாலை அருகில் நின்ற போது அவரது நடவடிக்கை மீது சந்தேகம் கொண்ட பொலிஸார் மாணவியிடம் விசாரணை நடத்திய போது அவர் மது அருந்தியிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து பொலிஸார் மாணவியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இந்த நிலையில் குறித்த மாணவியிடம் பொலிஸார் விசாரணை நடத்திய போது தன்னுடைய தாத்தாவே தன்னை மது பழக்கத்திற்கு அடிமையாக்கியதாக குறித்த மாணவி தெரிவித்துள்ளார்.
———
யாழ்ப்பாணம், கல்வியங்காடு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர், அடிகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கல்வியங்காடு விளையாட்டரங்கு வீதியை சேர்ந்த கணபதிப்பிள்ளை மஹேந்திரன் எனும் 54 வயது நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
உயிரிழந்த குடும்பஸ்தரின் மனைவி நேற்று முன்தினம் (11) வெள்ளிக்கிழமை திருமணச் சடங்கிற்கு சென்றவேளை குடும்பஸ்தர் தனிமையில் வீட்டில் இருந்துள்ளார்.
அந்நிலையில் நேற்றைய தினம் உறவினரொருவர் இவர்களது வீட்டிற்கு சென்ற போது, குடும்பஸ்தர் சடலமாக காணப்பட்டதை அவதானித்து, சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவித்ததை தொடர்ந்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலத்தில் தாக்குதலுக்கு உள்ளான காயங்கள் காணப்படுவதுடன், சடலம் நிர்வாணமாகவும் காணப்படுவதால் குடும்பஸ்தர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
சம்பவ இடத்திற்கு நேரில் விஜயம் செய்த யாழ் நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா மற்றும் சட்ட வைத்திய அதிகாரி மயூரன் ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
———
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடனை மீள பெற வந்த இருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு, ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மஹரகம, நாவின்ன பிரதேசத்தில் நேற்று (19) காலை இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் தலகல, கிரிவந்துடுவ பகுதியைச் சேர்ந்த 58 வயதுடையவர் எனவும், உயிரிழந்தவர் நாவின்ன பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கடன் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இறந்தவர் கடன் தொகையை வசூலிப்பதற்காக மற்றொரு நபருடன் முச்சக்கர வண்டியில் கடனாளியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இருவரும் வந்து கடனாளியின் வீட்டின் மூடியிருந்த கேட்டை திறக்க முற்பட்டதுடன், அப்போது கடன் வாங்கிய வீட்டின் உரிமையாளர் கூரிய ஆயுதம் ஒன்றை கொண்டு வந்து இருவரையும் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.
பின்னர் காயமடைந்த இருவரும் தாங்கள் வந்த அதே முச்சக்கரவண்டியில் ஹோமாகம வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.
சந்தேகநபருக்கு வழங்கப்பட்ட கடன் தொகையை பெற்றுக் கொள்ள உயிரிழந்தவர் வந்த போதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொலையை செய்த 60 வயதுடைய சந்தேக நபர் ஹோகந்தர பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்ற வேளையில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.