ஜூலியன் & ஜெரோமா இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஜோமோன் பிலிப் மற்றும் ஜீனா ஜோமோன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘அங்காரகன்’. ஸ்ரீபதி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் சத்யராஜ் வில்லனாக நடிக்கிறார். மலையாள நடிகை நியா நாயகியாக நடிக்கிறார்.
மேலும் அங்காடித்தெரு மகேஷ், ரெய்னா காரத், ரோஷன், அப்புக்குட்டி, தியா,நேகா ரோஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். மோகன் டச்சு இயக்கியுள்ளார். செப்-8 ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இதில் சத்யராஜ் பேசும்போது கூறியதாவது:
இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஸ்ரீபதி ‘இதில் நான் ஹீரோ, நீங்கள் வில்லன், ஓகேவா?’ என்றார். முழுக்கதையும் அவர் கூறியபோது பிடித்திருந்தது. ‘லவ் டுடே’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டபோது கூட தயக்கம் இருந்தது. ஆனாலும் நடித்தேன். அந்தப் படம் பெரிய வெற்றி பெற்றது. அதனால் இப்போதெல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை.
தவிர ‘வால்டர் வெற்றிவேல்’, ‘அமைதிப்படை’ காலத்தில் சினிமா என் கையில் இருந்தது. இப்போது நான் சினிமாவின் கையில் இருக்கிறேன். அந்த எதார்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.
என் தாயார் இறந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் இந்த விழாவுக்க்கு வந்துவிட்டேனே என்கிறார்கள். அதற்கு காரணம் என் அம்மா தான். நான் பெரியாரிஸ்ட் என்பதால், 2 வருடங்களுக்கு முன்பே என்தாயார் என் சொந்த பந்தங்களை அழைத்து, அவர் இறந்து விட்டால், என் மகனை எந்த சடங்குகளையும் செய்யச் சொல்லி நிர்ப்பந்திக்கக் கூடாது என்று உறுதியாகச் சொல்லிவிட்டார். அப்படி அவர் கூறியதால் தான் இன்று இந்த மேடையில் நிற்க முடிகிறது.நான் தற்போது தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறேன். என் கையில் தற்போது 20 படங்கள் இருக்கின்றன. சூப்பர் ஸ்டார் பற்றி கேட்கிறார்கள். சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி சார். உலக நாயகன் என்றால் கமல். தளபதி என்றால் விஜய். தல என்றால் அஜித்.
இவ்வாறு சத்யராஜ் கூறினார்